Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

வி.ஜி.பி. தங்கக் கடற்கரையிலிருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-பி. சுந்தரராஜன்

தேர்வுத்துறை கவனக்குறைவால் நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியது !

பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பது, விடைத்தாள் நகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியதால் அவரது மதிப்பெண் குறைந்துபோனது.
விடைத்தாள் நகல்
பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள் நகல்கள் தரப்படுகின்றன. இதற்கு தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறும் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளும், பெயிலானவர்களும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள்.
.
அதேபோல், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி அனுப்பப்பட்டது. கூட்டல் தவறு, விடைத்தாள் மாற்றம், சரியாக மார்க் வழங்காதது என ஏராளமான குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
.
குளறுபடி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி சுவிதா விலங்கியல் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தார். நன்றாக படிக்கக்கூடிய இந்த மாணவிக்கு உயிரியல் பாடத்தில் வெறும் 80 மதிப்பெண்தான் வந்திருந்தது. ஆனால் அவரது உண்மையான மதிப்பெண் 143 என்பது நகல் மூலம் தெரிய வந்தது.
.
இதேபோல், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவசக்தி. ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எல்லா பாடங்களிலும் 170-க்கு மேல் வாங்கிய சிவசக்திக்கு உயிரியல் பாடத்தில் தேர்வில் வெறும் 30 மதிப்பெண்ணே (செய்முறைத்தேர்வு மார்க் தனி) கிடைத்தது. டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்த இந்த மாணவிக்கு உயிரியல் தேர்வில் 30 மதிப்பெண் கிடைத்த அதிர்ச்சியில் உறைந்து போனார்.
.
விடைத்தாள் மாறியது
மகள் நல்ல மார்க் வாங்கி டாக்டர் ஆவார் என்று கனவு கொண்டிருந்த அவரது பெற்றோர் திட்டித் தீர்த்தனர். இருந்தாலும் நன்றாக தேர்வு எழுதி இருந்த நம்பிக்கையில் மாணவி சிவசக்தி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தார்.
.
தபாலில் விடைத்தாள் நகலைப் பெற்றார். தபால் உறையை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். காரணம், அவரது தேர்வு எண்ணில் இருந்த விடைத்தாள் மதுரையில் தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு மாணவரின் விடைத்தாள் ஆகும்.
.
சிவசக்தியின் மதிப்பெண் வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டார். தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த மாணவியின் விடைத்தாள் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் இருந்த அவரது விடைத்தாளை கண்டுபிடித்து சரிபார்த்தபோது, அவரது உண்மையான மதிப்பெண் 174 என்பது தெரிய வந்தது. தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அந்த மாணவிக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
.
மன உளைச்சல்
இதேபோல் சென்னை மாணவர் ஒருவரின் கணித மதிப்பெண் 171 என்பதற்குப் பதிலாக தவறாக 117 என்று குறிப்பிடப்பட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்று ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வுத்துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நொந்து போய்விடுகிறார்கள். தவறே செய்யாமல் யாரோ செய்த தவறுக்காக தாங்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் பரிதாபமுடன் கூறினார்கள்.
.

நன்றி: தினத்தந்தி, 11-06-2008
.

விவகாரம் இத்தோடு முடியவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலவரம்.
.

இதற்கான முழுமையான காரணம், தேவையான அளவில் பணியாட்கள் இல்லாததே. கடந்த பல வருடங்களாக அரசுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது. மிகவும் அத்தியாவசியமான இடங்களில் தினக்கூலி அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ மிகக்குறைந்த ஊதியத்திற்கு நிரந்தரம் அல்லாத பணியாளர்கள் நிரப்பப் படுகின்றனர்.
.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கீழ்நிலை எழுத்தர்(Lower Division Clerk) , கணிப்பொறி இயக்குனர்(Computer Operator) போன்ற அனைத்து இடங்களுமே இத்தகைய தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவதாக தெரிகிறது. இவர்கள்தான் மாணவர்களின் விண்ணப்பங்கள், கட்டணங்கள், தேர்வு அனுமதி சீட்டுகள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை கையாளுகின்றனர்.
.

எந்தவிதமான வேலை உத்தரவாதமோ, மற்ற பணிப்பாதுகாப்பு அம்சங்களோ இல்லாமல் மேலதிகாரிகளின் அனுசரணையுடன் மட்டுமே பணியாற்றும் இவர்களிடம்தான் நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் கல்வி உள்ளது.
.

தனியார் நிறுவனங்களில் மனிதவள சுரண்டல் நடந்தால் அதை கண்காணிக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் நலச்சட்டங்களும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த கல்வி நிலையங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
.

அரசுத்துறைகளின் இத்தகையப்போக்கு இந்த அமைப்புகளில் பணியாற்றும் மனிதவளத்தை மட்டும் சுரண்டவில்லை. இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சுரண்டப்படுகிறது.

-நுகர்வோர் நலன் குழு

மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்...!

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களான நமக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.
நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல.

சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.


தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.


அனைவரும் வருக!

சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம் – வழக்கு நிலவரம்

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மாலை, லண்டன்வாழ் தமிழரான திரு இளஞ்செழியன் குடும்பத்தினருடன் தி.நகர், ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சென்றார். அங்கு நடந்ததை அவரே விவரிக்கிறார்.


‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.

.
லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸுக்குச் சென்றோம்.
குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.

.
அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.
அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.
பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.


மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.

.
என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.

.
கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

.
என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.

.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.

.
இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
.
பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.
.
இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேர் மாம்பலம் போலீஸாரால் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.


இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 கலகம் விளைவித்தல், 341 முறைகேடான தடுப்பு, 294B ஆபாசமாக பேசுதல், திட்டுதல், 336 கவனமின்மை காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், 323 தன்னிச்சையாக காயம் விளைவி்த்தல், 506(2) குற்றமுறு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை, சைதாப்பேட்டை 17வது குறறவியல் நடுவர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 9ம் தேதியன்று நடைபெறுகிறது.
-ஆசிரியர் குழு

வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் (Banking Ombudsman Scheme)


வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006


A. முன்னுரை
1. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006, அளிப்பவை என்ன ?
வங்கிகளின் சேவைகள் குறித்த புகார்கள் மீது உறுதியான முடிவெடுப்பிற்கு வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 வழிவகுக்கிறது.

2. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் செயல் முறைக்கு வந்துவிட்டதா ?
இத் திட்டம் ஜன்வரி 1, 2006 முதல் அமலுக்கு வந்துள்ளது.

3. வங்கிக் குறைதீர்ப்பாளர் யார் ?
வங்கிச்சேவைகளில் ஏற்படும் குறைபாட்டின் மேல் வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களைத் தீர்க்கும் பொருட்டு ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டவரே வங்கிக் குறைதீர்ப்பாளர்.

4. வங்கிக் குறைதீர்ப்பாளருக்கு சட்டரீதியான அதிகாரம் உண்டா ?
வங்கிக் குறைதீர்ப்பாணையம் பகுதியளவு நீதிமன்றத்திற்குகந்த அதிகாரம் வாய்ந்தது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஆணைகள் பிறப்பிக்கவும், நடுநிலையாளர்கள் மூலம் புகார்களைத் தீர்க்கவும் அதற்கு அதிகாரமுண்டு.

5. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எத்தனை நிறுவப்பட்டுள்ளன ? அவை எங்குள்ளன ?
நாளது தேதி வரை, 15 வங்கிக் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அலுவலகங்கள் பெரும்பாலும் மாநில தலைநகரங்களில் உள்ளன. குறைதீர்ப்பாணையங்களின் முகவரிகள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

6. வங்கிக் குறைதீர்ப்புத்திட்டம், 2006 உள்ளடக்கும் வங்கிகள் யாவை ?
அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், தொடக்கநிலைக் கூட்டுறவு வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

7. பழைய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2002 லிருந்து புதிய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 எவ்வாறு வேறுபடுகிறது?
புதிய திட்டம் பரப்பெல்லையிலும், நோக்க அளவிலும், 2002ன் பழைய திட்டத்தை விடச் சிறந்தது. புதிய திட்டம், புகார்களை கணினி வழியாக அளிக்கவும் வழி வகுத்துள்ளது. வங்கியோ, வாடிக்கையாளரோ, குறைதீர்ப்பாணையர் அளிக்கும் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிவகுக்கும் வகையில், மேல்முறையீட்டை ஏற்றாய்வு செய்யும் அதிகாரியை கூடுதலாக நிறுவிடவும் புதிய திட்டம் வழிவகுத்துள்ளது.



B. வங்கிக் குறைதீர்ப்பாணையம் முன்வைக்கப்படும் புகார்களின் வகைகள்

8. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எந்த வகையான குறைகளைக் கவனிக்கலாம் ?
வங்கிச்சேவை குறைபாடு குறித்த பின்வரும் புகார்களை வங்கிக் குறைதீர்ப்பாணையம் ஏற்று கவனிக்கலாம்.
)( காசோலை, கேட்போலை, உறுதிச்சீட்டுகள் போன்றவைகள் மீதான பணம் வசூலிக்கப்பதில் தொகை அளிக்கப்படாவிட்டாலோ, அல்லது அளிப்பதிலோ மிதமிஞ்சிய காலதாமதம்

)( போதிய காரணமின்றி, சிறு இலக்க மதிப்பு ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் செலுத்தப்படும்போது, வாங்க மறுப்பதும் அச் சேவைக்குத் தரகுத் தொகை/கட்டணங்கள் வசூலிப்பதும்

)( உள்வரும் பணவரவுத்தொகைகளை செலுத்தாமலிருப்பதும் செலுத்துவதில் தாமதம் செய்வதும்

)( பணவழங்காணைகள், கேட்போலைகள், வங்கி வரைவோலைகள் வழங்காமலிருத்தல் அல்லது வழங்குவதில் காலதாமதம் செய்தல்

)( குறிக்கப்பட்ட வங்கிவேலை நேரத்தை அனுசரிக்காமலிருத்தல்

)( கடன் சான்றிதழ், மற்றும் கடன் உத்தரவும் சார்ந்த கடமைப்பொறுப்பை மதித்து நடப்பதிலிருந்து தவறுதல்

)( கடன் வழங்கும் வசதி தவிர, எழுத்தளவில் வங்கியாலோ அல்லது அதன் நேரடி விற்பனை முகவர்கள் மூலமாகவோ உறுதியளிக்கப்பட்ட வங்கி வசதியை அளிக்காமலிருத்தல் அல்லது அளிப்பதில் தாமதம்

)( வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு, நடப்புக்கணக்கு அல்லது வேறெந்தவகைக் கணக்கிலும், வாடிக்கையாளருக்குரிய வரவு வைக்கப்படவேண்டிய தொகையை வரவு வைக்காமலிருத்தல், தாமதித்தல், சேமிப்பைத் திருப்பியளிக்காமலிருத்தல், வட்டி விகிதம் போன்ற பல விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை அனுசரிக்காமலிருத்தல்

)( ஏற்றுமதியாளருக்குரிய ஏற்றுமதித் தொகையைப்பெற்று அளிப்பதில் தாமதம். ஏற்றுமதி உறுதிச்சீட்டுகள் கையாளுதல் மற்றும் உறுதிச்சீட்டுகள் வசூல் இவற்றில் தாமதம் போன்றவைகளில் வங்கியின் உள்நாட்டுச் செயல்பாடுகள்

)( மறுப்பதற்கான எந்த உரிய காரணம் இல்லாமல் சேமிப்புக்கணக்கினைத் துவக்க மறுத்தல்

)( உரிய முன் அறிவிப்பு ஏதும் அளிக்காமல் கட்டணங்கள் வசூலித்தல்

)( தானியங்கி பணம் வழங்கும்/பற்று அட்டை நடைமுறைகள் மற்றும் கடன் அட்டை நடைமுறைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அனுசரிக்காத வங்கிகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மீதான புகார்கள்

)( பணியாளரல்லாத ஒரு நபரின் ஓய்வூதிக் கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்ல முடிந்தால் அத்தகைய புகார்கள்

)( ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்லமுடிந்தால் (ஆனால் தனது பணியாளர்களது குறைகளுக்கல்லாமல்) அத்தகைய புகார்கள்

)( ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரிகளுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அதை தாமதப்படுத்துதல்

)( இந்திய அரசுப்பத்திரங்களை வெளியிடமறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றை பராமரிக்க மறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றிற்குரிய பணத்தைத் திருப்பித்தர மறுத்தல் அல்லது தாமதித்தல்

)( வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பின்றி அல்லது வலிந்து சேமிப்புக்கணக்கினைக் காரணமின்றி முடித்துக்கொள்ளுதல்

)( வங்கிக் கணக்குகளை முடிக்க மறுத்தல் அல்லது முடித்தலில் தாமதம்

)( நியாயமான பழக்கங்களுக்கான வங்கியின் நெறி முறைகளிலிருந்து பிறழுதல்

)( வங்கிச்சேவை மற்றும் இதர சேவைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களிலிருந்து பிறழும் எந்தவிதமான விஷயத்திற்காகவும் புகார் செய்யலாம்

9. குடியிருப்பாளரல்லாத இந்தியரின் புகார்களை குறைதீர்ப்பாயம் கவனிக்குமா ?
ஆம். இந்தியாவில் கணக்கு வைத்துள்ள குடியிருப்பாளரல்லாத இந்தியரின் கணக்கு குறித்து வெளிநாட்டிலிருந்து வரும் பணம், சேமிப்புக்கணக்கு, மற்றும் வங்கி சார்ந்த விஷயங்கள் குறித்த புகார்களை கவனிக்கும்.



C. வங்கிகள் குறைதீர்ப்பாளரிடம் விண்ணப்பித்தல்

10. எப்போது புகார்தாரர் புகாரினை அளிக்கலாம் ?
குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப்பெற்றுக் கொண்ட ஒருமாதத்திற்குள் பதில் தராவிட்டாலோ, புகாரை வாங்க மறுத்தாலோ, திருப்திகரமாக பதிலளிக்காவிட்டாலோ, குறைதீர்ப்பாணையத்திடம் தமது புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்.

11. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்தில் புகார் அளிப்பதற்கு முன் புகார் அளிப்பவர் ஏதாவது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா ?
குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான வேண்டுகோள் மூலம் முயற்சித்து ஒரு திருப்திகரமான தீர்வினைப் பெற முதலில் முயல்வது அவசியம் – ஆயினும் புகாருக்குரிய நிகழ்விற்கு ஒருவருடத்திற்குள்ளாக அந்தப்புகார் அளிக்கப்பட வேண்டும்.

12. குறைதீர்ப்பாணையம் ஒன்றில் முந்தைய நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட்ட அதே விபரம் குறித்த புகாரினை மீண்டும் குறைதீர்ப்பணையத்திடம் அளிக்கலாமா ?
கூடாது. ஒரே விபரங்குறித்து முன்பே அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து அதே விபரத்திற்காக குறை தீர்ப்பாணையத்திடம் விண்ணப்பம் அளிக்கக்கூடாது.

13. நடுவர்மன்றம், தீர்ப்புமன்றம், சட்டஉரிமையுள்ள நீதிமன்றம் அல்லது பிற அவைகள் இவற்றால் தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது தீர்ப்பு நிலுவையிலிருக்கும் விஷயங்குறித்து வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் தரலாமா ?
கூடாது.

14. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்காக ஏதேனும் செயல்முறை உண்டா ?
ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வங்கிக் குறை தீர்ப்பாணையத்திடம் புகார் தரலாம். கணிணி மூலம் www.bankingombudsman.rbi.org.in. இணையதளத்திற்குரிய முகவரிக்கு மின் அஞ்சல் மூலமும் புகார் தரலாம். எல்லா வங்கிக்கிளைகளிலும் கிடைக்கும் மாதிரிப்படிவங்கள் மூலமும் புகார் அளிக்கலாம். ஆயினும் படிவத்தை உபயோகிப்பது கட்டாயமில்லை. எதுவாயினும் புகார்தாரர் தேவையான அனைத்துத் தகவலையும் அளிக்க வேண்டும்.

15. புகார்தாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி புகாரை அளிக்கலாமா?
ஆம். வக்கீலாக இல்லாத அங்கீகரிக்கப்பட்ட புகார்தாரரின் பிரதிநிதி புகாரை அளிக்கலாம். (ஏன் வக்கீலாக இருக்கக்கூடாது. வங்கிகள் செய்யும் தில்லுமுல்லுகளை வக்கீல் கேள்விகேட்பார் என்பதற்காகவா?)

16. வங்கிக் குறைதீர்ப்பாயம் முன்பாக புகார் பதிவு செய்ய ஏதாவது செலவு உண்டா ?
இல்லை. குறைதீர்ப்பாயம் வாடிக்கையாளர் குறை தீர்க்க எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.

17. விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் அளிக்கப்படவேண்டும்?
புகார் அளிப்பவரின் பெயர், முகவரி, மற்றும் எந்த வங்கியின் மீது புகார் தரப்படுகிறதோ அந்த வங்கிக் கிளையின் பெயர் முகவரி, புகாருக்கு உள்ளாக்கிய உண்மை விவரங்கள், ஏதாவது ஆவணச்சான்றுகள் இருப்பின் அவையும், அந்நிகழ்வினால் ஏற்பட்ட நஷ்டத்தின் அளவு, மற்றும் தன்மை, குறைதீர்ப்பாணையத்திடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வு இவற்றோடு ஒரு உறுதிமொழியும் அளிக்கப்பட வேண்டும். மேற்கொண்டு செயல்படவேண்டிய சில நிபந்தனைகளை மேற்கொள்வேன் என்பதற்கான உறுதிமொழியே அதுவாகும். இவையனைத்தையும் குறைதீர்ப்பாணையத்திற்கு அளிக்கவேண்டும்.



D. குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகள்

18. குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளித்தபின் நடப்பது என்ன ?
சமரசம் அல்லது இடையிட்டு பேச்சுவார்த்தை இவற்றின் மூலம் புகார்தாரர் மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்ட வங்கிக்கு இடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த வங்கிக் குறைதீர்ப்பாயம் முயல்கிறது.

19. வங்கியே தீர்வினைத்தர முன்வந்தால் என்ன நடக்கும் ?
புகார்தாரதின் புகாரை முழுவதுமாகக் முடிவாகக் தீர்க்கும் வகையில் வங்கி அளிக்கும் தீர்வு இருக்குமாயின் அவை புகார்தாரர் ஒத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்திட்டால் குறைதீர்ப்பாயம் அதனடிப்படையில் தீர்வினை வழங்கும். அது இருவரையும் (புகார்தார், வங்கி) கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

20. உடன் படிக்கையால் புகார் தீர்க்கப்படாவிட்டால் என்ன செய்வது?
ஒருமாதத்திற்குள் புகாரானது உடன்படிக்கையால் தீர்க்கப்படாவிட்டால், குறைதீர்ப்பாயம் தனது தீர்ப்பினை வழங்க முனையும். அவ்வாறு தீர்ப்பினை வழங்கும் முன்பாக, புகார்தாரருக்கும், வங்கிக்கும் தனது வாதத்தை முன்வைக்க குறைதீர்ப்பாயம் வாய்ப்பு அளிக்கும்.

21. ஒரு தீர்ப்பினை வழங்க குறைதீர்ப்பாயம் எவற்றையெல்லம் கவனிக்கும் ?
தீர்ப்பினை வழங்கும் முன் ஆவணச்சான்றுகளை சாட்சிக்காக அளித்திருப்பின் அவற்றை குறைதீர்ப்பாயம் பரிசீலிக்கும். அவற்றோடு, வங்கிவிதி மற்றும் நடைமுறைச்சட்டத்தின் கோட்பாடுகள், ரிசர்வ் வங்கி வெளியிட்ட கட்டளைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் இதர காரணிகள் என்று நிதியின்பாற்பட்டு கவனிக்கப்பட வேண்டியவை அனைத்தையும் தீர்ப்பாயம் கவனித்து தீர்ப்பினை வழங்கும்.



E. குறைதீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு

22. வங்கிகள் குறைதீர்ப்பாயம் தீர்ப்பளித்தபின் நிகழ்வது என்ன ?
தீர்ப்பு வழங்கப்பட்டதும் புகார்தாரருக்கும், புகாரில் குறைப்பிட்ட வங்கிக்கும் தீர்ப்பின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். புகார்தாரர் முழு முடிவானதாக அந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது மறுக்கலாம்.

23. தீர்ப்பு ஏற்புடையதாயின் புகார்தாரர் என்ன செய்ய வேண்டும் ?
தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட வங்கிக்கு, அந்த தீர்ப்பினை முழு முடிவாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, ஒரு ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் அனுப்ப வேண்டும்.

24. புகார்தாரர் தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்புவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்கமுடியுமா ?
முடியும். இவ்வாறு கூடுதலாக கால அவகாசம் கேட்பதற்கான உரிய காரணங்களோடு, புகார்தாரர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை வங்கிக் குறைதீர்ப்பாணையத்திற்கு அனுப்பலாம்.

25. தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்ப புகார்தாரர் கூடுதலாகக் கால அவகாசம் கேட்கும் போது, வங்கிக் குறைதீர்ப்பாயம் என்ன செய்யும் ?
புகார்தாரர் இத்தகைய வேண்டுகோள் விடுக்கும் போது அதில் குறிப்பிட்ட காரணங்கள் திருப்தியளிப்பதாக இருந்தால், வங்கிகள் குறைதீர்ப்பாயம் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் இதற்காக அளிக்கலாம்.

26. முழு முடிவாகத்தீர்ப்பினை ஏற்றுக்கொண்டதன் ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் வங்கிக்கு அனுப்பியபின் என்ன நிகழ்கிறது ?
புகார்தாரரிடமிருந்து தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குள் வங்கிக்கும் அது திருப்தியளித்தால் வங்கி அதனைச்செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தியதை வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

27. வங்கிக் குறைதீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு புகார்தாரருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய ஏதாவது வழி உண்டா?
தீர்ப்பு ஏற்புடையதாக இல்லையெனில், புகார்தாரர் அதனை எதிர்த்து மேல்முறையீட்டு அதிகாரியை அணுகலாம்.

28. தீர்ப்பினைப் புகார்தாரர் ஏற்க மறுக்கும் பட்சத்தில், நடைமுறையிலிருக்கும் சட்டத்தின்படி, அவைகள், நீதிமன்றம் அல்லது ஏதாவதொரு சட்டபூர்வ நிர்வாகத்தின் முன்பாக தனது புகாரைத் தீர்த்துக்கொள்ளும் அவரது உரிமை பாதிக்கப்படுமா ?
சட்டப்படி புகார்தாரர் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும், அது பாதிக்காது.

29. தீர்ப்பு வங்கிக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் என்ன் நிகழும் ?
இந்த திட்டத்தின் கீழ் வங்கி தனது மேல் முறையீட்டை மேல்முறையீட்டு அதிகாரியின் முன் வைக்க வாய்ப்பளிக்கப்படும்.



F. தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு

30. மேல் முறையீடு ஏற்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
மேல் முறையீட்டை ஏற்கும் அதிகாரம் பெற்றவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆவார்.

31. மேல் முறையீடு செய்ய ஏதாவது கால வரையறை உண்டா ?
குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினால் திருப்தியடையாத இருதரப்பினரில் எவரேனும் தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 45 நாட்களுக்குள், மேல் முறையீட்டு அதிகாரி முன்பாக தனது மேல் முறையீட்டை செய்யவேண்டும. காலவரையறைக்குள் செய்ய இயலாமல் போனதற்கு சரியான காரணம் இருக்குமாயின், அது மேல்முறையீட்டு அதிகாரிக்கு திருப்தியளிக்குமாயின் அவர் மேலும் 30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம், வங்கிகள் மேல் முறையீடு செய்ய வேண்டுமாயின் அந்த வங்கியின் தலைவர், அவர் வராதபோது, நிர்வாக இயக்குநர் அல்லது செயல் இயக்குநர், அல்லது முக்கிய செயலாக்க அதிகாரி அல்லது அதே தகுதியிலுள்ள அதிகாரியின் முன் அனுமதி பெற்ற பின்னரே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

32. மேல் முறையீடு அதிகாரி மேல்முறையீட்டை எப்படிக் கையாளுகிறார் ?
மேல் முறையீடு அதிகாரி.
(i) அதைத் தள்ளுபடி செய்யலாம்
(ii) அதை அனுமதித்து, குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினைத் தள்ளி வைக்கலாம்.
(iii) மேல் முறையீட்டு அதிகாரி தேவை அல்லது சரியென்று கருதும் கட்டளைகளோடு தீர்ப்பினைப் புதிதாக அளிக்கும்படி அந்த விஷயத்தை மீண்டும் குறைதீர்ப்பாணையத்திற்கே அனுப்பி வைக்கலாம்.
(iv) தீர்ப்பினை மாற்றியமைத்து, அதற்குத்தேவையான கட்டளைகளோடு மாற்றப்பட்ட தீர்ப்பினை அளிக்கலாம்.
(v) எது சரியெனக் கருதுகிறதோ, அதன்படி வேறு ஆணை வழங்கலாம்.


G. மற்றவைகள்

33. எந்த நிலையிலாவது, குறைதீர்ப்பணையம் புகாரைத் தள்ளுபடி செய்ய இயலுமா ?
ஆம். எந்த நிலையிலும் புகாரை, வங்கிக் குறை தீர்ப்பாணையம் கீழ்க்கண்ட வகையிலானது என்று கருதினால் தள்ளுபடி செய்யலாம்.
1. போதிய காரணமில்லாமல் அலைக்கழிக்கும் விதமாக, முக்கியமில்லாத அல்லது தீய நோக்கோடு புகார் இருந்தால்.
2. புகார்தாரர் போதிய கவனத்தோடு அதில் செயல்படவில்லை எனத்தெரிய வந்தால்
3. புகார்தாருக்கு நஷ்டமோ, சிக்கலோ அல்லது தொந்தரவோ அதனால் ஏற்படவில்லையென வங்கிக் குறைதீர்ப்பாயம் கருதினால்.
4. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் பணம் சார்ந்த வரையறை எல்லைக்குள் இல்லாமலிருந்தால்.
5. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் கருத்தின்படி, புகாரின் சிக்கலான நிலை கருதி, விரிவான ஆவண சோதனை, மற்றும் நேரடி சாட்சிகள் போன்ற குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகளுக்கு ஒவ்வாதவை தீர்ப்பளிப்பதற்குத்தேவைப்பட்டால்.

34. குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 அமலாக்கத்திற்கு முன், நிலுவையிலுள்ள புகார்கள் எந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும்?
நிலுவையிலுள்ள புகார்களின் தீர்ப்பு மற்றும் முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டவற்றின் நிறைவேற்றம் ஆகியவை தொடர்ந்து வங்கிகள் குறைதீர்ப்புத்திட்டம் 1995, 2002 படி செயல்படுத்தப்படும்.

35. இந்த திட்டத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன ?
வங்கி வாடிக்கையாளரின் புகார்களுக்கு விரைவான தீர்வுகாணும் ஒரு முறைமையாக, ரிசர்வ் வங்கி, வங்கிக் குறைதீர்ப்புத்திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளது. அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான வங்கிச்சேவை குறித்த வாடிக்கையாளர் புகார்களைத் தீர்த்திட நிறுவன மற்றும் சட்டரீதியான அமைப்பினை அமைத்துத் தந்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, சட்டப்பிரிவு 35-A கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் வாயிலாக இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனின் மேம்பட்ட செயல்திறனுக்கான, ரிசர்வ் வங்கி தன்னிடம் பணி புரியும் உயர் அதிகாரிகளை குறைதீர்ப்பாளராக நியமித்து தீர்ப்பாணய பணியாளர்களையும் நியமித்து அவ்வலுவலகச் செலவையும் ஏற்கிறது.

36. வங்கிக் குறைதீர்ப்பாணையத் திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது ?
முதலில் இத்திட்டம் 1995ல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்ன்ர் 2002ல் திருத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், 36,000 புகார்களை வங்கிகள் குறைதீர்ப்பாயம் கையாண்டுள்ளது. (இவற்றில் எத்தனை புகார் கொடுத்த வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்?)

நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

சிறப்பு பொருளாதார மண்டலம் - ஒரு சிறப்பு பார்வை (2)

தேடல் என்ற இந்த குறும்படம் நம்மை நாம் தேட பயன்படும்...

நுகர்வோர் உரிமைக்கோட்பாட்டின் (சுருக்கமான) வரலாறு

மனித சமூகம் உருவான காலத்தில் வேட்டையாடுதலும், விவசாயமும் தொழிலாக இருந்த காலத்தில் நுகர்வோர் உரிமைக்கான தேவைகள் இருக்கவில்லை. அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் தேவைகளுக்கு, தங்களையே சார்ந்திருந்தனர்.
.
பின் ஏற்பட்ட தொழிற்புரட்சி - உற்பத்தி ஓரிடத்திலும், அதை பயன்படுத்தும் நுகர்வோர் மற்றோர் இடத்திலும் இருக்கும் சமூக சூழ்நிலையை ஏற்படுத்தியது.


இதன் பின்னரே மூலதனக்குவிப்புக்காக தொழிலாளர்களையும், நுகர்வோரையும் ஏமாற்றுவது என்பது வெற்றிகரமான வணிகத்திற்கான கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது.
.
முதலாளித்துவ கொள்கைகளில் முன்னணி வகித்த அமெரிக்காவில்தான் அதற்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்பட்டது. நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சிப்பொறுப்பிற்கு வரும் திட்டம் உள்ளவர்கள் நுகர்வோர் நலன்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் தோன்றியது.
.
இந்நிலையில் 1936ம் ஆண்டில் டாக்டர் கால்ஸ்டன் வார்னன் நுகர்வோர் ஒருங்கமைப்பு (CONSUMERS UNION) என்ற நுகர்வோர் அமைப்பை நிறுவினார்.
.
இதையடுத்து அமெரிக்க குடியரசுத்தலைவரான ஜான் எஃப் கென்னடி 1962ம் ஆண்டு மார்ச் 15ம் நாள் நுகர்வோர் உரிமைகள் சட்டத்தை உருவாக்கினார்.
.
இந்த சட்டத்தின் கீழ் பின்வரும் உரிமைகள் நுகர்வோர் உரிமைகளாக பிரகடனம் செய்யப்பட்டன:
.
1. பாதுகாப்பு உரிமை
2. தகவல் பெறும் உரிமை
3. தேர்ந்தெடுக்கும் உரிமை
4. முறையீட்டு உரிமை
.
இந்த பிரகடனத்தின் அடிப்படையில், 'நுகர்வோர் சர்வதேசியம்' (CONSUMERS INTERNATIONAL) என்ற அமைப்பு நுகர்வோர் உரிமைகளை உலகெங்கும் பரவ முயற்சி செய்தது.
.
இதன் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் அவை, நுகர்வோர் உரிமைகளை அங்கிகரித்து அவற்றை உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டு முறைகளாக வழங்கியது.
.
இதையடுத்து இந்தியாவில் 1986ம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
.
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் விளைவாக உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் கடன் பெற வேண்டுமானால் இதுபோன்ற சில சட்டங்களை உறுப்பு நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் இந்த சட்டம் இந்தியாவில் அமல் படுத்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

சட்டத்தின் பார்வையில் நுகர்வோர்

ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!
.
ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.
.
இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.
.
அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.
.
இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.
.
பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.
.
அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.
.
இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.
.
அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான்.
.
இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
.
அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது.
.
அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அதற்கு வேறு சட்டங்கள் உள்ளன.

நுகர்வோர்களுக்கு வணக்கம்!

மனித சமூகத்தில் உள்ள அனைவரும் நாடு, இனம், மதம், மொழி, பாலினம் போன்ற எந்த குழும(GROUP)த்தில் பிரிந்து நின்றாலும் அனைத்து மக்களையும் பிரிக்க முடியாத குழுமம் "நுகர்வோர்" என்ற குழுமமே!
.
பிறந்த குழந்தை முதல், வயோதிகத்தின் விளிம்பில் நிற்கும் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வோராகவே வாழ்கிறோம். பொருளாதாரத்தில் மேன்மை நிலையில் உள்ள செல்வந்தர்கள் முதல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பி்ச்சைக்காரர்கள்வரை அனைவருமே நுகர்வோர்தான். செல்வந்தர் ஒருவர் சொந்தமாக கார் வாங்கும்போது நுகர்வோர் ஆகிறார்; பிச்சைக்காரர் இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்து பேருந்து பயணச்சீட்டு வாங்கும்போது நுகர்வோர் ஆகிறார்.
.
ஆக, அவரவர் தகுதிக்கு ஏற்ப அனைவருமே நுகர்வோர்தான். காட்டில் மறைந்துவாழ்ந்து சர்ச்சைக்குரிய மரணத்தை அடைந்த சந்தன கடத்தல் வீரப்பன் முதல், தலைமறைவு வாழ்க்கை வாழும் நக்ஸல்பாரிகள்வரை அனைவரும் நுகர்வோர்களே.
.
இந்த நுகர்வோர்களை நம்பித்தான் உலகப்பொருளாதாரமே இயங்குகிறது. இந்த நுகர்வோர்கள் கொடுக்கும் வரியிலிருந்துதான் உலகின் அரசுகள் இயங்குகின்றன. பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் மக்கள்கூட காசு கொடுத்துதான் உணவு உண்கின்றனர். கட்டணம் செலுத்தியே பயணம் செய்கின்றனர். இம்மக்கள் உண்ணும் உணவுப்பொருட்களுக்கு வரிகள் செலுத்தப்பட்ட பிறகே அந்த பொருள் உணவாக மாறுகிறது. எனவே இந்த மக்களும், அரசுக்கு (மறைமுகமாக) வரி செலுத்துகின்றனர் என்பதே உண்மை.
இந்த நுகர்வோர்கள் செலுத்தும் விலை /கட்டணத்துக்கு உரிய பொருளை/சேவையை வழங்க வேண்டியது அந்த பொருளை/சேவையை வழங்கும் வணிக/அரசு நிறுவனத்தின் கடமையும், பொறுப்புமாகும். இதனை மேற்பார்வையிட்டு சீர்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
.
நடைமுறையில் நுகர்வோரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? அவ்வாறு நுகர்வோர் நலன்கள் பாதுகாக்கப்படுவதை அரசு கண்காணிக்கிறதா?