நவீன யுகத்தில் மருத்துவச்சேவையின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த உலகில் உள்ள அனைவருமே அறிவர்.
மருந்து நிறுவனங்களின் கட்டு்ப்பாட்டில் உள்ள மருத்துவத்துறையின் மக்கள் விரோதப்போக்கை எந்த மீடியாவும் கண்டு கொள்வதில்லை. காரணம் மருந்து நிறுவனங்களின் இந்த ஆதிக்கம் அரசு அமைப்புகளை மட்டுமல்லாமல் மீடியாத்துறையையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.
மருத்துவத்துறையில் அவ்வப்போது நடைபெறும் சில அவலங்களை பரபரப்பான செய்திகளாக விற்று காசு சம்பாதிக்கும் மீடியா, அந்த அவலங்களுக்கான காரணங்களையோ, தீர்வுகளையோ ஆராய்வதில்லை.
இது மட்டுமல்லாமல் பல அவலங்களுக்கு இந்த மீடியாவே நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறது.
குறிப்பாக தமிழில் பல சிறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மருத்துவ நிகழ்ச்சிகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பது அதை நடத்துபவர்களுக்கும் தெரியும்,ஒலி-ஒளி பரப்புபவர்களுக்கும் தெரியும். ஆனால் அரசு அமைப்புகளுக்கு மட்டும் இந்த சட்டவிரோத நிகழ்ச்சிகள் குறித்து தெரியாது. அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
தொலைக்காட்சி ஊடகம் மட்டுமே இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூற முடியாது. இயன்றவரை அனைத்து ஊடகங்களும் இத்தகைய மக்கள் விரோத – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
தமிழ் பத்திரிகைகளில் “இந்தியா டுடே” புத்திசாலி வாசகர்களின் இதழாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழில் தொடர்ந்து பலகாலமாக வெளிவரும் விளம்பரம் ஒன்று, மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு என்ற பெயரில் BASM, MD with RMP படிப்புகளை வழங்குவதாக கூறுகிறது. மேலும் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படும் இந்த படிப்பு இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான தகுதி என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.
நாம் அறிந்தவரை “இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்” என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவோ, அது அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்த படிப்பை “இந்திய மெடிக்கல் கவுன்சில்” அங்கீகரிக்க வில்லை. எனவே இது சட்டத்திற்கு எதிரான செயலே.
ஆனால் இதுபற்றி எந்த கவலையுமின்றி, விளம்பரம் மூலம் வரும் வருவாய் மட்டுமே குறியாக “இந்தியா டுடே” செயல்படுவதாக தோன்றுகிறது.
அதேபோல “தினமணி”யிலும்கூட அதன் ஞாயிறு இணைப்பான தினமணிக் கதிரிலும், நாள்பட்ட நோய்களை உத்தரவாதமாக தீர்ப்பதாக சவால்விடும் விளம்பரங்கள் வாரம்தோறும் வெளியாகி வருகின்றன. இதே பக்கங்களில் நோயை தீர்க்க எண் கணிதம், அருள் வாக்கு ஆகியவற்றுக்குமான விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. அஞ்சல் வழி மருத்துவக்கல்விக்கான விளம்பரமும் உண்டு.
இவையும் சட்டரீதியாக தவறான செயல்களே. இத்தகைய விளம்பரங்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் முறைப்படியான கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லர்.
இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள் ஒரு சாமானிய மனிதரின் விழிப்புணர்வோடுகூட செயல்படுவதில்லை. நேச்சுரோபதி, ஹோமியோபதி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளை நடத்திவரும் ஒரு நிறுவனம் ஏழு தலைமுறையாக சித்தமருத்துவம் பார்த்து வருவதாக ஒரு விளம்பரத்தை "ஜூனியர் விகடன்" உட்பட பல பத்திரிகைளில் பார்த்திருக்கலாம். அதில் ஏழாவது தலைமுறை வைத்தியராக சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் புகைப்படமும் வெளியாகி இருக்கும். இந்த சிறுவன் யாருக்கு வைத்தியம் பார்க்கிறான்? இவனிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டவர்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் எந்த பத்திரிகை நிறுவனத்துக்கும் எழவில்லை என்பது சோகம் ததும்பும் நகைச்சுவையாகும்.
மக்கள் இதுபோன்ற போலி மருத்துவர்களை நாடிச்செல்வதற்கு முக்கிய காரணம் நவீன மருத்துவம் என்பது மக்களை கொள்ளை அடிக்கும் செயலாக மாறிப்போனதே. அதற்கு சற்றும் குறைவி்ல்லாத விதத்தில் பத்திரிகைகளும் இத்தகைய போலிகளுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.
வாழ்க பத்திரிகை சுதந்திரம்!
-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)