Showing posts with label நுகர்வோர் கல்வி. Show all posts
Showing posts with label நுகர்வோர் கல்வி. Show all posts

மக்களின் உயிரோடு விளையாடும் ஊடகங்கள்!

நவீன யுகத்தில் மருத்துவச்சேவையின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த உலகில் உள்ள அனைவருமே அறிவர்.

மக்களாட்சி முறையின் நான்காவது தூண் என்று கருதப்படும் மீடியாத்துறை இந்த மருத்துவச்சேவையை எவ்வாறு பார்க்கிறது என்று பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மருந்து நிறுவனங்களின் கட்டு்ப்பாட்டில் உள்ள மருத்துவத்துறையின் மக்கள் விரோதப்போக்கை எந்த மீடியாவும் கண்டு கொள்வதில்லை. காரணம் மருந்து நிறுவனங்களின் இந்த ஆதிக்கம் அரசு அமைப்புகளை மட்டுமல்லாமல் மீடியாத்துறையையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.

மருத்துவத்துறையில் அவ்வப்போது நடைபெறும் சில அவலங்களை பரபரப்பான செய்திகளாக விற்று காசு சம்பாதிக்கும் மீடியா, அந்த அவலங்களுக்கான காரணங்களையோ, தீர்வுகளையோ ஆராய்வதில்லை.

இது மட்டுமல்லாமல் பல அவலங்களுக்கு இந்த மீடியாவே நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறது.

குறிப்பாக தமிழில் பல சிறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மருத்துவ நிகழ்ச்சிகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பது அதை நடத்துபவர்களுக்கும் தெரியும்,ஒலி-ஒளி பரப்புபவர்களுக்கும் தெரியும். ஆனால் அரசு அமைப்புகளுக்கு மட்டும் இந்த சட்டவிரோத நிகழ்ச்சிகள் குறித்து தெரியாது. அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.


தொலைக்காட்சி ஊடகம் மட்டுமே இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூற முடியாது. இயன்றவரை அனைத்து ஊடகங்களும் இத்தகைய மக்கள் விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.


சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


தமிழ் பத்திரிகைகளில் இந்தியா டுடே புத்திசாலி வாசகர்களின் இதழாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழில் தொடர்ந்து பலகாலமாக வெளிவரும் விளம்பரம் ஒன்று, மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு என்ற பெயரில் BASM, MD with RMP படிப்புகளை வழங்குவதாக கூறுகிறது. மேலும் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படும் இந்த படிப்பு இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான தகுதி என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.

நாம் அறிந்தவரை இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின் என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவோ, அது அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்த படிப்பை இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரிக்க வில்லை. எனவே இது சட்டத்திற்கு எதிரான செயலே.


ஆனால் இதுபற்றி எந்த கவலையுமின்றி, விளம்பரம் மூலம் வரும் வருவாய் மட்டுமே குறியாக இந்தியா டுடே செயல்படுவதாக தோன்றுகிறது.


அதேபோல தினமணியிலும்கூட அதன் ஞாயிறு இணைப்பான தினமணிக் கதிரிலும், நாள்பட்ட நோய்களை உத்தரவாதமாக தீர்ப்பதாக சவால்விடும் விளம்பரங்கள் வாரம்தோறும் வெளியாகி வருகின்றன. இதே பக்கங்களில் நோயை தீர்க்க எண் கணிதம், அருள் வாக்கு ஆகியவற்றுக்குமான விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. அஞ்சல் வழி மருத்துவக்கல்விக்கான விளம்பரமும் உண்டு. இவையும் சட்டரீதியாக தவறான செயல்களே. இத்தகைய விளம்பரங்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் முறைப்படியான கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லர்.


இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள் ஒரு சாமானிய மனிதரின் விழிப்புணர்வோடுகூட செயல்படுவதில்லை. நேச்சுரோபதி, ஹோமியோபதி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளை நடத்திவரும் ஒரு நிறுவனம் ஏழு தலைமுறையாக சித்தமருத்துவம் பார்த்து வருவதாக ஒரு விளம்பரத்தை "ஜூனியர் விகடன்" உட்பட பல பத்திரிகைளில் பார்த்திருக்கலாம். அதில் ஏழாவது தலைமுறை வைத்தியராக சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் புகைப்படமும் வெளியாகி இருக்கும். இந்த சிறுவன் யாருக்கு வைத்தியம் பார்க்கிறான்? இவனிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டவர்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் எந்த பத்திரிகை நிறுவனத்துக்கும் எழவில்லை என்பது சோகம் ததும்பும் நகைச்சுவையாகும்.


மக்கள் இதுபோன்ற போலி மருத்துவர்களை நாடிச்செல்வதற்கு முக்கிய காரணம் நவீன மருத்துவம் என்பது மக்களை கொள்ளை அடிக்கும் செயலாக மாறிப்போனதே. அதற்கு சற்றும் குறைவி்ல்லாத விதத்தில் பத்திரிகைகளும் இத்தகைய போலிகளுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.


வாழ்க பத்திரிகை சுதந்திரம்!



-பி. சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)


வி.ஜி.பி. தங்கக் கடற்கரையிலிருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-பி. சுந்தரராஜன்

தேர்வுத்துறை கவனக்குறைவால் நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியது !

பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்திருப்பது, விடைத்தாள் நகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவியின் விடைத்தாள் மாறியதால் அவரது மதிப்பெண் குறைந்துபோனது.
விடைத்தாள் நகல்
பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள் நகல்கள் தரப்படுகின்றன. இதற்கு தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறும் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளும், பெயிலானவர்களும் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள்.
.
அதேபோல், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி அனுப்பப்பட்டது. கூட்டல் தவறு, விடைத்தாள் மாற்றம், சரியாக மார்க் வழங்காதது என ஏராளமான குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
.
குளறுபடி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவி சுவிதா விலங்கியல் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தார். நன்றாக படிக்கக்கூடிய இந்த மாணவிக்கு உயிரியல் பாடத்தில் வெறும் 80 மதிப்பெண்தான் வந்திருந்தது. ஆனால் அவரது உண்மையான மதிப்பெண் 143 என்பது நகல் மூலம் தெரிய வந்தது.
.
இதேபோல், இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவசக்தி. ஆயிரத்திற்கு மேல் மார்க் வாங்கி எல்லா பாடங்களிலும் 170-க்கு மேல் வாங்கிய சிவசக்திக்கு உயிரியல் பாடத்தில் தேர்வில் வெறும் 30 மதிப்பெண்ணே (செய்முறைத்தேர்வு மார்க் தனி) கிடைத்தது. டாக்டர் ஆக வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்த இந்த மாணவிக்கு உயிரியல் தேர்வில் 30 மதிப்பெண் கிடைத்த அதிர்ச்சியில் உறைந்து போனார்.
.
விடைத்தாள் மாறியது
மகள் நல்ல மார்க் வாங்கி டாக்டர் ஆவார் என்று கனவு கொண்டிருந்த அவரது பெற்றோர் திட்டித் தீர்த்தனர். இருந்தாலும் நன்றாக தேர்வு எழுதி இருந்த நம்பிக்கையில் மாணவி சிவசக்தி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தார்.
.
தபாலில் விடைத்தாள் நகலைப் பெற்றார். தபால் உறையை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார். காரணம், அவரது தேர்வு எண்ணில் இருந்த விடைத்தாள் மதுரையில் தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு மாணவரின் விடைத்தாள் ஆகும்.
.
சிவசக்தியின் மதிப்பெண் வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டார். தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த மாணவியின் விடைத்தாள் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் இருந்த அவரது விடைத்தாளை கண்டுபிடித்து சரிபார்த்தபோது, அவரது உண்மையான மதிப்பெண் 174 என்பது தெரிய வந்தது. தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் அந்த மாணவிக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
.
மன உளைச்சல்
இதேபோல் சென்னை மாணவர் ஒருவரின் கணித மதிப்பெண் 171 என்பதற்குப் பதிலாக தவறாக 117 என்று குறிப்பிடப்பட்டதும் தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்று ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வுத்துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நொந்து போய்விடுகிறார்கள். தவறே செய்யாமல் யாரோ செய்த தவறுக்காக தாங்கள் அலைக்கழிக்கப்படுவது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் பரிதாபமுடன் கூறினார்கள்.
.

நன்றி: தினத்தந்தி, 11-06-2008
.

விவகாரம் இத்தோடு முடியவில்லை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலவரம்.
.

இதற்கான முழுமையான காரணம், தேவையான அளவில் பணியாட்கள் இல்லாததே. கடந்த பல வருடங்களாக அரசுத்துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது. மிகவும் அத்தியாவசியமான இடங்களில் தினக்கூலி அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ மிகக்குறைந்த ஊதியத்திற்கு நிரந்தரம் அல்லாத பணியாளர்கள் நிரப்பப் படுகின்றனர்.
.

சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கீழ்நிலை எழுத்தர்(Lower Division Clerk) , கணிப்பொறி இயக்குனர்(Computer Operator) போன்ற அனைத்து இடங்களுமே இத்தகைய தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவதாக தெரிகிறது. இவர்கள்தான் மாணவர்களின் விண்ணப்பங்கள், கட்டணங்கள், தேர்வு அனுமதி சீட்டுகள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை கையாளுகின்றனர்.
.

எந்தவிதமான வேலை உத்தரவாதமோ, மற்ற பணிப்பாதுகாப்பு அம்சங்களோ இல்லாமல் மேலதிகாரிகளின் அனுசரணையுடன் மட்டுமே பணியாற்றும் இவர்களிடம்தான் நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் கல்வி உள்ளது.
.

தனியார் நிறுவனங்களில் மனிதவள சுரண்டல் நடந்தால் அதை கண்காணிக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் நலச்சட்டங்களும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த கல்வி நிலையங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
.

அரசுத்துறைகளின் இத்தகையப்போக்கு இந்த அமைப்புகளில் பணியாற்றும் மனிதவளத்தை மட்டும் சுரண்டவில்லை. இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சுரண்டப்படுகிறது.

-நுகர்வோர் நலன் குழு

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!

நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!

வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச் சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எது மரபணு (Gene)?

ஒவ்வொரு உயிரிலும், அதன் குரோமோசோம்களில் மரபுத் தன்மையை (கறுப்பு மயிரா, கருப்பு கருவிழியா, பழுப்புத் தோலா, குட்டையா, நெட்டையா எனும் உண்மைகளைக்) கொண்டிருக்கும் DNA குழுமத்தை மரபணு என்கிறார்கள். A,D,C,G எனும் நான்கு வித புரதங்களால் double=helix முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புரதக் கூட்டுதான் நம் வாழ்வின் ‘அடிப்படை ஆதாரம்' என்றால் இன்றளவில் அது மிகையல்ல, நாயைக் கண்டால் மிரள்வதும், பெண்ணை கண்டால் வழிவதும், 4 வயதில் வரும் அம்மை, 40 வயதில் வரும் வயிற்றுப்புண், புற்று என நடக்கும் எல்லாவற்றிற்கும் இப்புரதக் கூட்டு காரணமாயிருக்கிறது.

அதே போல், ஒரு தாவரம் குட்டையாக வளர வேண்டுமா? மஞ்சள் பூ பூக்க வேண்டுமா? என அத்தனையும் அம்மரபணுவின் புரதப் புரோகிராம்கள் தான் நிர்ணயிக்கின்றன.

எவை மரபணு மாற்றப் பயிர்கள் (Genetically Modified Organism)?

காலை அகட்டி பாதங்களால் பற்றி, மரமேறி கொட்டைப்பாக்கு எடுக்க முடியாது. கைக்கெட்டும் தூரத்தில் பாக்கு விளைந்தால் என்ன? எப்பவும் அழுகாத பழங்கள், ‘சாலடு’க்கு வெட்ட ஏதுவான தடிப்புத் தோலுடன் தக்காளி, புழு துளைக்காத கத்தரி, பூச்சி அண்டாத பயிரினங்கள், வறட்சியிலும் வாடாத கிரானைட்' காய்கறிகள்'', என இந்த பூவுலகின் ‘தாதா' மனிதன் எதற்கும் மெனக்கெடாது இருக்க விளைபொருளில் நடக்கும் விஞ்ஞான விளையாட்டுதான் மரபணு மாற்றப் பயிர்கள். எப்படி?

உதாரணத்திற்கு, குதிரைபோல் ஓடும் நல்ல வேகமான திறனுடைய மகவு வேண்டுமெனில், பிறந்த குழந்தைக்கு தொடந்து பயிற்சி கொடுத்து பழக்க வேண்டியதில்லை. ஒரு குதிரையைப் புணர்ந்து, அதில் உருவாகும் கருவை உடைத்து, அதன் குரோமோசோமைச் சிதைத்து, அதன் DNA-ஐ வெட்டி எடுத்து தன் துணையின் கரு முட்டையில் நுழைத்து, பிள்ளையை பிரசவித்தால் அக்குழந்தை குதிரை போல் ஒடலாம். ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கலாம்! என்ன? கொஞ்சம் வாய் நீளமாகவும், பின்பகுதியில் வாலும், கால் கைகளில் குளம்பும் இருக்கலாம்! அதனால் என்ன? குழந்தை குதிரை போல் ஓடும்! கற்பனை செய்யவே ‘பயங்கரமாக' உள்ளதல்லவா? இது தான் இந்த மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி தாரக மந்திரம்.

தனக்கு, தன் சந்தைக்கு வேண்டிய பயிரை உற்பத்தி செய்ய, பயிரின் மரபணுவை மாற்றம் செய்தோ, சிதைத்தோ அதே குடும்பப் பயிர் அல்லது வேறு உயிரின் (அது பாக்டீயாவோ, டைனசரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) மரபணுவினை வெட்டி ஒட்டியோ, புதிய பயிரை உருவாக்குவது தான் இந்த மரபணு மாற்றப்பயிர்.

பயிர்பாதுகாப்பு, புழுக்களில் இருந்தும் வைரசுகளிலும் இருந்து பாதுகாப்பு, களைகளை மீறி பயிர் வளரும் தன்மை என்ற காரணங்களுக்காகவே இந்த வித்தை பயன்படுத்தப்படுவதாக, விஞ்ஞான மேதாவிக் கூட்டம், மான்சான்டோ தலைமையில் கூறிவந்தாலும், உட்காரணம் மற்றும் ஒரே காரணம் மொத்தமாய் உழவுச் சந்தையை அபகரிக்க நினைப்பது மட்டுமே. கூடுதலாய், சமீபத்திய உலகளாவிய உணவுப் பற்றாக்குறைக்கு ஒரே நிவாரணமாகவும் இவை உருப்பெற்று வருவது அவர்களது சமீபத்திய சாதனை.

‘இது ஒன்றும் புதிதல்ல' எனும் வாதமும் சில விளக்கங்களும்…

உங்கள் கொள்ளுத் தாத்தாவின் குணங்களைவிட உங்கள் உடல்நலத்தின் வளத்திலும் ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் பெற்றிருக்கக்கூடும். கடந்து வந்த சமூகச் சூழலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மரபு தகவமைத்துக் கொண்ட விளைவு அது. விதையுடன் இருந்த வாழைப்பழம் இப்போது விதையற்று இருப்பதும், பெரிய நெல்லிக்கனி போலிருந்த தக்காளி இப்போது இப்படி இருப்பதும் என்றோ, பாக்டீரியாவாய் இருந்த பச்சையம் (Chlorophills) இன்று தாவர பகுதியாய் மாறியதும் மரபணு மாற்றத்தால்தான். ஆனால் அவை நிகழ 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் வரை ஆனது. இயற்கையை சிதைக்காமல், பல்லுயிர் ஒம்பி படைக்கப்பட்ட சந்ததிகள் அவை. ஒரு சிம்பன்ஸி குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான். ஆனால், அது நிகழ 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாம்.

இப்படி நிகழும் இயற்கை மாற்றங்களை பல நூறுகோடி ரூபாய் கொண்டு உருவாக்கிய ஆய்வறையில் மரபணுவை வெட்டி ஒட்டி நிகழ்ந்த “DOLLY”க்களை உருவாக்குவதும் BT பருத்தி, BT அரிசி, BT சோளம் உருவாக்குவதும் எப்படி ஒன்றாகும்?
முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு!

‘பேசிலஸ் துருஞ்சியேனம்' எனும் பாக்டீயாவின் மரபை கத்தரிக்காயின் மரபணுவுடன் ஒட்டி, பிறக்கும் (உருவாக்கும்) கத்தரி மரபில் அந்த பாக்டீயாவின் ஒட்டபட்ட மரபணு உருவாக்கும் Toxin இருப்பதால் புழு நுழையாது என்கின்றனர். “அந்த நஞ்சு நம்மைத் தாக்காதா?” என்றால், “அதிகம் சாத்தியமில்லை, வெகுசிலருக்கு லேசான அரிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்” என்கின்றனர் மிக அலட்சியமாக.

முதலில் இது தேவையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக “இல்லை'' என்பது அதைப் படைத்த “பிரம்மா''க்களுக்கும் தெரியும். அடுத்து பாதுகாப்பானதா? என்றால் உலக சுகாதார நிறுவனமே மழுப்புகிறது (http://www.who.int/foodsafety/publications/biotech/20questions/en/).

மரபணு மாற்றப் பயிர்கள் எப்படி மனித நலத்தை பாதிக்கும்?
ஒவ்வாமை (Allergenicity) மரபணு ஊடுருவல் (Gene Transfer) வெளிபரவுதல் (Out Crossing) என்று மூன்று முக்கிய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன.

ஒவ்வாமை (Allergenicity)
மல்லிகையை நுகர்ந்தால் களிக்கும் நம் மனம், அம்மோனியாவை நுகரும் போது சுளிப்பதும், இன்னும் வீரிய நைட்ரஜன் வேதிப் பொருட்களை நுகரும் போது உடம்பெல்லாம் தடிப்பது, மூச்சிரைப்பது என நோயைத் தருவதைதான் ஒவ்வாமை என்கின்றனர். அது உடனடி நிகழ்வாய் (hypersensitivity) இருக்கலாம்; அல்லது நாட்படவும் நிகழலாம். உடனடியாய் நிகழும் போது, Urticaria (உடல் முழுதும் வரும் தடாலடியான அரிப்பும், தடிப்பும்) மூக்கடைப்பு மற்றும் இரைப்பு (sinusitis & asthma), குமட்டல், வயிறு பிரட்டல், வாந்தி, (Nausea vomitting) தடாலடியாக மரணம் (anaphaloxis shock) ஆகியன ஏற்படக் கூடும்.

நாட்பட நிகழ்வது Celiac disease, தோல் கரப்பான்கள், ஆஸ்துமா, மூட்டுவலிகள், auto-immune disorders என பல வகை நோய்களை உருவாக்கும். இன்னும் காரணம் கண்டறியப்படாத பல நோய்கட்கு, இந்த மாதிரி உடலுக்குள் நுழையும் நச்சுக்கள் காரணமாக இருக்கக் கூடும்.

மரபணு ஊடுருவல் (Gene Transfer)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு. அல்லது குடலினுள் தோன்றும் புதிய உயிர்கள் புதிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு, திடீர் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், ஏன் HIV குறித்தும் இது போன்ற ஐயங்கள் உண்டு.

வெளிபரவல் (Out Crossing)

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கண்ணாடி குடுகைக்குள் விளைவிக்கப்பட போவதில்லை, விளைநிலத்தில் பயிராகும் போது மகரந்த சேர்க்கையில். பக்கத்து நிலத்து மாசற்ற பயிருக்கும், மூலிகைக்கும் ஊறு விளைவித்து எது GMO? என்ற கேள்வி கேட்கும்படி மொத்தமாய் கலந்துவிடவும் வாய்ப்புண்டு.

பதிலளிக்கப்படாத பல கேள்விகள்

“மரபணு புரதம் வயிற்றுள் சென்றவுடன் சிதைந்துவிடும், பயப்படத் தேவையில்லை. சிலருக்கு வேண்டுமாணால் சங்கடம் ஏற்படலாம்'' என்கிறது மான்சான்டோ கூட்டம். ஆனால் அந்த “சிலர்'' இந்தியரோ அல்லது ஆப்பிரிக்கரோ அல்லது ஒடுக்கப்பட்ட இனமோ/நாடாக மட்டும் என இருப்பது ஏன்? மான்சாண்டோ நிறுவனம் உள்ள அமெரிக்க நாட்டின் விளைநிலத்தில் ஆய்வு நடத்த கூடாது. அதன் துணை குழுமங்கள் உள்ள ஐரோப்பிய கண்டத்தில் GMOக்கள் நுழைய கூடாது. நம் நாட்டில் மட்டும் குப்பனும் சுப்பனும் ''அந்த சிலராக'' சங்கடப்படவேண்டும் என்று சொல்வதுதான் Globalisation நியதியா ?

மரபணு புரதங்கள் ஒவ்வாமை தராது என்று இன்னும் முழுமையாக ஒரு ஆய்வும் வரவில்லை.

அந்த புரதங்களை தெளிவாக அளவிடும் அளவுகோள்கள், எவை ஒவ்வாமை புரதங்கள் என அளவிட முடியவில்லை.

தற்போதுள்ள சோதனைகளின் தரம் (Standard) அதன் வரைஎல்லை (Limitation) பற்றி தெளிவான கருதுகோள்களோ ஆய்வுகளோ இல்லை.

எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன் முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும் கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத் தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய் நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!


-மரு. கு. சிவராமன், BSMS, PhD.,
“பூவுலகின் நண்பர்கள்”
http://www.poovulagu.org/
herbsiddha@gmail.com
(மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்...! என்ற தலைப்பில் 15-06-2008 அன்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் கட்டுரை ஆசிரியர் உரையாற்றியதின் மூல வடிவம்)

மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்...!

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களான நமக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.
நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல.

சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.


தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.


அனைவரும் வருக!

கிரெடிட் கார்ட் - பில்லிங் தேதியும், வட்டியில்லா கடன் நாட்களும்...

கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.

இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.

இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.

பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.

உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.

மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.
-ஆசிரியர் குழு
பின்குறிப்பு: கிரெடிட் கார்டு குறித்த உங்கள் சந்தேகங்களை மறுமொழிப் பெட்டியில் பதிவு செய்யுங்கள். அதற்கு பதில் காண முயற்சிப்போம்.