Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

கிரெடிட் கார்ட் - பில்லிங் தேதியும், வட்டியில்லா கடன் நாட்களும்...

கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.

இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.

இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.

பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.

உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.

மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...

27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்

...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.
-ஆசிரியர் குழு
பின்குறிப்பு: கிரெடிட் கார்டு குறித்த உங்கள் சந்தேகங்களை மறுமொழிப் பெட்டியில் பதிவு செய்யுங்கள். அதற்கு பதில் காண முயற்சிப்போம்.

வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் (Banking Ombudsman Scheme)


வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006


A. முன்னுரை
1. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006, அளிப்பவை என்ன ?
வங்கிகளின் சேவைகள் குறித்த புகார்கள் மீது உறுதியான முடிவெடுப்பிற்கு வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 வழிவகுக்கிறது.

2. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் செயல் முறைக்கு வந்துவிட்டதா ?
இத் திட்டம் ஜன்வரி 1, 2006 முதல் அமலுக்கு வந்துள்ளது.

3. வங்கிக் குறைதீர்ப்பாளர் யார் ?
வங்கிச்சேவைகளில் ஏற்படும் குறைபாட்டின் மேல் வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களைத் தீர்க்கும் பொருட்டு ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டவரே வங்கிக் குறைதீர்ப்பாளர்.

4. வங்கிக் குறைதீர்ப்பாளருக்கு சட்டரீதியான அதிகாரம் உண்டா ?
வங்கிக் குறைதீர்ப்பாணையம் பகுதியளவு நீதிமன்றத்திற்குகந்த அதிகாரம் வாய்ந்தது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஆணைகள் பிறப்பிக்கவும், நடுநிலையாளர்கள் மூலம் புகார்களைத் தீர்க்கவும் அதற்கு அதிகாரமுண்டு.

5. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எத்தனை நிறுவப்பட்டுள்ளன ? அவை எங்குள்ளன ?
நாளது தேதி வரை, 15 வங்கிக் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அலுவலகங்கள் பெரும்பாலும் மாநில தலைநகரங்களில் உள்ளன. குறைதீர்ப்பாணையங்களின் முகவரிகள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

6. வங்கிக் குறைதீர்ப்புத்திட்டம், 2006 உள்ளடக்கும் வங்கிகள் யாவை ?
அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், தொடக்கநிலைக் கூட்டுறவு வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

7. பழைய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2002 லிருந்து புதிய வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 எவ்வாறு வேறுபடுகிறது?
புதிய திட்டம் பரப்பெல்லையிலும், நோக்க அளவிலும், 2002ன் பழைய திட்டத்தை விடச் சிறந்தது. புதிய திட்டம், புகார்களை கணினி வழியாக அளிக்கவும் வழி வகுத்துள்ளது. வங்கியோ, வாடிக்கையாளரோ, குறைதீர்ப்பாணையர் அளிக்கும் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிவகுக்கும் வகையில், மேல்முறையீட்டை ஏற்றாய்வு செய்யும் அதிகாரியை கூடுதலாக நிறுவிடவும் புதிய திட்டம் வழிவகுத்துள்ளது.



B. வங்கிக் குறைதீர்ப்பாணையம் முன்வைக்கப்படும் புகார்களின் வகைகள்

8. வங்கிக் குறைதீர்ப்பாணையம் எந்த வகையான குறைகளைக் கவனிக்கலாம் ?
வங்கிச்சேவை குறைபாடு குறித்த பின்வரும் புகார்களை வங்கிக் குறைதீர்ப்பாணையம் ஏற்று கவனிக்கலாம்.
)( காசோலை, கேட்போலை, உறுதிச்சீட்டுகள் போன்றவைகள் மீதான பணம் வசூலிக்கப்பதில் தொகை அளிக்கப்படாவிட்டாலோ, அல்லது அளிப்பதிலோ மிதமிஞ்சிய காலதாமதம்

)( போதிய காரணமின்றி, சிறு இலக்க மதிப்பு ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் செலுத்தப்படும்போது, வாங்க மறுப்பதும் அச் சேவைக்குத் தரகுத் தொகை/கட்டணங்கள் வசூலிப்பதும்

)( உள்வரும் பணவரவுத்தொகைகளை செலுத்தாமலிருப்பதும் செலுத்துவதில் தாமதம் செய்வதும்

)( பணவழங்காணைகள், கேட்போலைகள், வங்கி வரைவோலைகள் வழங்காமலிருத்தல் அல்லது வழங்குவதில் காலதாமதம் செய்தல்

)( குறிக்கப்பட்ட வங்கிவேலை நேரத்தை அனுசரிக்காமலிருத்தல்

)( கடன் சான்றிதழ், மற்றும் கடன் உத்தரவும் சார்ந்த கடமைப்பொறுப்பை மதித்து நடப்பதிலிருந்து தவறுதல்

)( கடன் வழங்கும் வசதி தவிர, எழுத்தளவில் வங்கியாலோ அல்லது அதன் நேரடி விற்பனை முகவர்கள் மூலமாகவோ உறுதியளிக்கப்பட்ட வங்கி வசதியை அளிக்காமலிருத்தல் அல்லது அளிப்பதில் தாமதம்

)( வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு, நடப்புக்கணக்கு அல்லது வேறெந்தவகைக் கணக்கிலும், வாடிக்கையாளருக்குரிய வரவு வைக்கப்படவேண்டிய தொகையை வரவு வைக்காமலிருத்தல், தாமதித்தல், சேமிப்பைத் திருப்பியளிக்காமலிருத்தல், வட்டி விகிதம் போன்ற பல விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை அனுசரிக்காமலிருத்தல்

)( ஏற்றுமதியாளருக்குரிய ஏற்றுமதித் தொகையைப்பெற்று அளிப்பதில் தாமதம். ஏற்றுமதி உறுதிச்சீட்டுகள் கையாளுதல் மற்றும் உறுதிச்சீட்டுகள் வசூல் இவற்றில் தாமதம் போன்றவைகளில் வங்கியின் உள்நாட்டுச் செயல்பாடுகள்

)( மறுப்பதற்கான எந்த உரிய காரணம் இல்லாமல் சேமிப்புக்கணக்கினைத் துவக்க மறுத்தல்

)( உரிய முன் அறிவிப்பு ஏதும் அளிக்காமல் கட்டணங்கள் வசூலித்தல்

)( தானியங்கி பணம் வழங்கும்/பற்று அட்டை நடைமுறைகள் மற்றும் கடன் அட்டை நடைமுறைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அனுசரிக்காத வங்கிகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மீதான புகார்கள்

)( பணியாளரல்லாத ஒரு நபரின் ஓய்வூதிக் கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்ல முடிந்தால் அத்தகைய புகார்கள்

)( ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்லமுடிந்தால் (ஆனால் தனது பணியாளர்களது குறைகளுக்கல்லாமல்) அத்தகைய புகார்கள்

)( ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரிகளுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அதை தாமதப்படுத்துதல்

)( இந்திய அரசுப்பத்திரங்களை வெளியிடமறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றை பராமரிக்க மறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றிற்குரிய பணத்தைத் திருப்பித்தர மறுத்தல் அல்லது தாமதித்தல்

)( வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பின்றி அல்லது வலிந்து சேமிப்புக்கணக்கினைக் காரணமின்றி முடித்துக்கொள்ளுதல்

)( வங்கிக் கணக்குகளை முடிக்க மறுத்தல் அல்லது முடித்தலில் தாமதம்

)( நியாயமான பழக்கங்களுக்கான வங்கியின் நெறி முறைகளிலிருந்து பிறழுதல்

)( வங்கிச்சேவை மற்றும் இதர சேவைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களிலிருந்து பிறழும் எந்தவிதமான விஷயத்திற்காகவும் புகார் செய்யலாம்

9. குடியிருப்பாளரல்லாத இந்தியரின் புகார்களை குறைதீர்ப்பாயம் கவனிக்குமா ?
ஆம். இந்தியாவில் கணக்கு வைத்துள்ள குடியிருப்பாளரல்லாத இந்தியரின் கணக்கு குறித்து வெளிநாட்டிலிருந்து வரும் பணம், சேமிப்புக்கணக்கு, மற்றும் வங்கி சார்ந்த விஷயங்கள் குறித்த புகார்களை கவனிக்கும்.



C. வங்கிகள் குறைதீர்ப்பாளரிடம் விண்ணப்பித்தல்

10. எப்போது புகார்தாரர் புகாரினை அளிக்கலாம் ?
குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப்பெற்றுக் கொண்ட ஒருமாதத்திற்குள் பதில் தராவிட்டாலோ, புகாரை வாங்க மறுத்தாலோ, திருப்திகரமாக பதிலளிக்காவிட்டாலோ, குறைதீர்ப்பாணையத்திடம் தமது புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்.

11. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்தில் புகார் அளிப்பதற்கு முன் புகார் அளிப்பவர் ஏதாவது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா ?
குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான வேண்டுகோள் மூலம் முயற்சித்து ஒரு திருப்திகரமான தீர்வினைப் பெற முதலில் முயல்வது அவசியம் – ஆயினும் புகாருக்குரிய நிகழ்விற்கு ஒருவருடத்திற்குள்ளாக அந்தப்புகார் அளிக்கப்பட வேண்டும்.

12. குறைதீர்ப்பாணையம் ஒன்றில் முந்தைய நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட்ட அதே விபரம் குறித்த புகாரினை மீண்டும் குறைதீர்ப்பணையத்திடம் அளிக்கலாமா ?
கூடாது. ஒரே விபரங்குறித்து முன்பே அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து அதே விபரத்திற்காக குறை தீர்ப்பாணையத்திடம் விண்ணப்பம் அளிக்கக்கூடாது.

13. நடுவர்மன்றம், தீர்ப்புமன்றம், சட்டஉரிமையுள்ள நீதிமன்றம் அல்லது பிற அவைகள் இவற்றால் தீர்ப்பளிக்கப்பட்ட அல்லது தீர்ப்பு நிலுவையிலிருக்கும் விஷயங்குறித்து வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் தரலாமா ?
கூடாது.

14. வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிப்பதற்காக ஏதேனும் செயல்முறை உண்டா ?
ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வங்கிக் குறை தீர்ப்பாணையத்திடம் புகார் தரலாம். கணிணி மூலம் www.bankingombudsman.rbi.org.in. இணையதளத்திற்குரிய முகவரிக்கு மின் அஞ்சல் மூலமும் புகார் தரலாம். எல்லா வங்கிக்கிளைகளிலும் கிடைக்கும் மாதிரிப்படிவங்கள் மூலமும் புகார் அளிக்கலாம். ஆயினும் படிவத்தை உபயோகிப்பது கட்டாயமில்லை. எதுவாயினும் புகார்தாரர் தேவையான அனைத்துத் தகவலையும் அளிக்க வேண்டும்.

15. புகார்தாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி புகாரை அளிக்கலாமா?
ஆம். வக்கீலாக இல்லாத அங்கீகரிக்கப்பட்ட புகார்தாரரின் பிரதிநிதி புகாரை அளிக்கலாம். (ஏன் வக்கீலாக இருக்கக்கூடாது. வங்கிகள் செய்யும் தில்லுமுல்லுகளை வக்கீல் கேள்விகேட்பார் என்பதற்காகவா?)

16. வங்கிக் குறைதீர்ப்பாயம் முன்பாக புகார் பதிவு செய்ய ஏதாவது செலவு உண்டா ?
இல்லை. குறைதீர்ப்பாயம் வாடிக்கையாளர் குறை தீர்க்க எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.

17. விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் அளிக்கப்படவேண்டும்?
புகார் அளிப்பவரின் பெயர், முகவரி, மற்றும் எந்த வங்கியின் மீது புகார் தரப்படுகிறதோ அந்த வங்கிக் கிளையின் பெயர் முகவரி, புகாருக்கு உள்ளாக்கிய உண்மை விவரங்கள், ஏதாவது ஆவணச்சான்றுகள் இருப்பின் அவையும், அந்நிகழ்வினால் ஏற்பட்ட நஷ்டத்தின் அளவு, மற்றும் தன்மை, குறைதீர்ப்பாணையத்திடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வு இவற்றோடு ஒரு உறுதிமொழியும் அளிக்கப்பட வேண்டும். மேற்கொண்டு செயல்படவேண்டிய சில நிபந்தனைகளை மேற்கொள்வேன் என்பதற்கான உறுதிமொழியே அதுவாகும். இவையனைத்தையும் குறைதீர்ப்பாணையத்திற்கு அளிக்கவேண்டும்.



D. குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகள்

18. குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளித்தபின் நடப்பது என்ன ?
சமரசம் அல்லது இடையிட்டு பேச்சுவார்த்தை இவற்றின் மூலம் புகார்தாரர் மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்ட வங்கிக்கு இடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த வங்கிக் குறைதீர்ப்பாயம் முயல்கிறது.

19. வங்கியே தீர்வினைத்தர முன்வந்தால் என்ன நடக்கும் ?
புகார்தாரதின் புகாரை முழுவதுமாகக் முடிவாகக் தீர்க்கும் வகையில் வங்கி அளிக்கும் தீர்வு இருக்குமாயின் அவை புகார்தாரர் ஒத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்திட்டால் குறைதீர்ப்பாயம் அதனடிப்படையில் தீர்வினை வழங்கும். அது இருவரையும் (புகார்தார், வங்கி) கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

20. உடன் படிக்கையால் புகார் தீர்க்கப்படாவிட்டால் என்ன செய்வது?
ஒருமாதத்திற்குள் புகாரானது உடன்படிக்கையால் தீர்க்கப்படாவிட்டால், குறைதீர்ப்பாயம் தனது தீர்ப்பினை வழங்க முனையும். அவ்வாறு தீர்ப்பினை வழங்கும் முன்பாக, புகார்தாரருக்கும், வங்கிக்கும் தனது வாதத்தை முன்வைக்க குறைதீர்ப்பாயம் வாய்ப்பு அளிக்கும்.

21. ஒரு தீர்ப்பினை வழங்க குறைதீர்ப்பாயம் எவற்றையெல்லம் கவனிக்கும் ?
தீர்ப்பினை வழங்கும் முன் ஆவணச்சான்றுகளை சாட்சிக்காக அளித்திருப்பின் அவற்றை குறைதீர்ப்பாயம் பரிசீலிக்கும். அவற்றோடு, வங்கிவிதி மற்றும் நடைமுறைச்சட்டத்தின் கோட்பாடுகள், ரிசர்வ் வங்கி வெளியிட்ட கட்டளைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் இதர காரணிகள் என்று நிதியின்பாற்பட்டு கவனிக்கப்பட வேண்டியவை அனைத்தையும் தீர்ப்பாயம் கவனித்து தீர்ப்பினை வழங்கும்.



E. குறைதீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு

22. வங்கிகள் குறைதீர்ப்பாயம் தீர்ப்பளித்தபின் நிகழ்வது என்ன ?
தீர்ப்பு வழங்கப்பட்டதும் புகார்தாரருக்கும், புகாரில் குறைப்பிட்ட வங்கிக்கும் தீர்ப்பின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். புகார்தாரர் முழு முடிவானதாக அந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது மறுக்கலாம்.

23. தீர்ப்பு ஏற்புடையதாயின் புகார்தாரர் என்ன செய்ய வேண்டும் ?
தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட வங்கிக்கு, அந்த தீர்ப்பினை முழு முடிவாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, ஒரு ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் அனுப்ப வேண்டும்.

24. புகார்தாரர் தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்புவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்கமுடியுமா ?
முடியும். இவ்வாறு கூடுதலாக கால அவகாசம் கேட்பதற்கான உரிய காரணங்களோடு, புகார்தாரர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை வங்கிக் குறைதீர்ப்பாணையத்திற்கு அனுப்பலாம்.

25. தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை அனுப்ப புகார்தாரர் கூடுதலாகக் கால அவகாசம் கேட்கும் போது, வங்கிக் குறைதீர்ப்பாயம் என்ன செய்யும் ?
புகார்தாரர் இத்தகைய வேண்டுகோள் விடுக்கும் போது அதில் குறிப்பிட்ட காரணங்கள் திருப்தியளிப்பதாக இருந்தால், வங்கிகள் குறைதீர்ப்பாயம் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் இதற்காக அளிக்கலாம்.

26. முழு முடிவாகத்தீர்ப்பினை ஏற்றுக்கொண்டதன் ஒப்புதல் கடிதத்தை புகார்தாரர் வங்கிக்கு அனுப்பியபின் என்ன நிகழ்கிறது ?
புகார்தாரரிடமிருந்து தீர்ப்பிற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்குள் வங்கிக்கும் அது திருப்தியளித்தால் வங்கி அதனைச்செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தியதை வங்கிகள் குறைதீர்ப்பாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

27. வங்கிக் குறைதீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு புகார்தாரருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய ஏதாவது வழி உண்டா?
தீர்ப்பு ஏற்புடையதாக இல்லையெனில், புகார்தாரர் அதனை எதிர்த்து மேல்முறையீட்டு அதிகாரியை அணுகலாம்.

28. தீர்ப்பினைப் புகார்தாரர் ஏற்க மறுக்கும் பட்சத்தில், நடைமுறையிலிருக்கும் சட்டத்தின்படி, அவைகள், நீதிமன்றம் அல்லது ஏதாவதொரு சட்டபூர்வ நிர்வாகத்தின் முன்பாக தனது புகாரைத் தீர்த்துக்கொள்ளும் அவரது உரிமை பாதிக்கப்படுமா ?
சட்டப்படி புகார்தாரர் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும், அது பாதிக்காது.

29. தீர்ப்பு வங்கிக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் என்ன் நிகழும் ?
இந்த திட்டத்தின் கீழ் வங்கி தனது மேல் முறையீட்டை மேல்முறையீட்டு அதிகாரியின் முன் வைக்க வாய்ப்பளிக்கப்படும்.



F. தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு

30. மேல் முறையீடு ஏற்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
மேல் முறையீட்டை ஏற்கும் அதிகாரம் பெற்றவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆவார்.

31. மேல் முறையீடு செய்ய ஏதாவது கால வரையறை உண்டா ?
குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினால் திருப்தியடையாத இருதரப்பினரில் எவரேனும் தீர்ப்பினைப் பெற்றுக்கொண்ட 45 நாட்களுக்குள், மேல் முறையீட்டு அதிகாரி முன்பாக தனது மேல் முறையீட்டை செய்யவேண்டும. காலவரையறைக்குள் செய்ய இயலாமல் போனதற்கு சரியான காரணம் இருக்குமாயின், அது மேல்முறையீட்டு அதிகாரிக்கு திருப்தியளிக்குமாயின் அவர் மேலும் 30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம், வங்கிகள் மேல் முறையீடு செய்ய வேண்டுமாயின் அந்த வங்கியின் தலைவர், அவர் வராதபோது, நிர்வாக இயக்குநர் அல்லது செயல் இயக்குநர், அல்லது முக்கிய செயலாக்க அதிகாரி அல்லது அதே தகுதியிலுள்ள அதிகாரியின் முன் அனுமதி பெற்ற பின்னரே மேல்முறையீடு செய்ய வேண்டும்.

32. மேல் முறையீடு அதிகாரி மேல்முறையீட்டை எப்படிக் கையாளுகிறார் ?
மேல் முறையீடு அதிகாரி.
(i) அதைத் தள்ளுபடி செய்யலாம்
(ii) அதை அனுமதித்து, குறைதீர்ப்பாணையத்தின் தீர்ப்பினைத் தள்ளி வைக்கலாம்.
(iii) மேல் முறையீட்டு அதிகாரி தேவை அல்லது சரியென்று கருதும் கட்டளைகளோடு தீர்ப்பினைப் புதிதாக அளிக்கும்படி அந்த விஷயத்தை மீண்டும் குறைதீர்ப்பாணையத்திற்கே அனுப்பி வைக்கலாம்.
(iv) தீர்ப்பினை மாற்றியமைத்து, அதற்குத்தேவையான கட்டளைகளோடு மாற்றப்பட்ட தீர்ப்பினை அளிக்கலாம்.
(v) எது சரியெனக் கருதுகிறதோ, அதன்படி வேறு ஆணை வழங்கலாம்.


G. மற்றவைகள்

33. எந்த நிலையிலாவது, குறைதீர்ப்பணையம் புகாரைத் தள்ளுபடி செய்ய இயலுமா ?
ஆம். எந்த நிலையிலும் புகாரை, வங்கிக் குறை தீர்ப்பாணையம் கீழ்க்கண்ட வகையிலானது என்று கருதினால் தள்ளுபடி செய்யலாம்.
1. போதிய காரணமில்லாமல் அலைக்கழிக்கும் விதமாக, முக்கியமில்லாத அல்லது தீய நோக்கோடு புகார் இருந்தால்.
2. புகார்தாரர் போதிய கவனத்தோடு அதில் செயல்படவில்லை எனத்தெரிய வந்தால்
3. புகார்தாருக்கு நஷ்டமோ, சிக்கலோ அல்லது தொந்தரவோ அதனால் ஏற்படவில்லையென வங்கிக் குறைதீர்ப்பாயம் கருதினால்.
4. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் பணம் சார்ந்த வரையறை எல்லைக்குள் இல்லாமலிருந்தால்.
5. வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் கருத்தின்படி, புகாரின் சிக்கலான நிலை கருதி, விரிவான ஆவண சோதனை, மற்றும் நேரடி சாட்சிகள் போன்ற குறைதீர்ப்பாணையத்தின் செயல் முறைகளுக்கு ஒவ்வாதவை தீர்ப்பளிப்பதற்குத்தேவைப்பட்டால்.

34. குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 அமலாக்கத்திற்கு முன், நிலுவையிலுள்ள புகார்கள் எந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும்?
நிலுவையிலுள்ள புகார்களின் தீர்ப்பு மற்றும் முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டவற்றின் நிறைவேற்றம் ஆகியவை தொடர்ந்து வங்கிகள் குறைதீர்ப்புத்திட்டம் 1995, 2002 படி செயல்படுத்தப்படும்.

35. இந்த திட்டத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன ?
வங்கி வாடிக்கையாளரின் புகார்களுக்கு விரைவான தீர்வுகாணும் ஒரு முறைமையாக, ரிசர்வ் வங்கி, வங்கிக் குறைதீர்ப்புத்திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளது. அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான வங்கிச்சேவை குறித்த வாடிக்கையாளர் புகார்களைத் தீர்த்திட நிறுவன மற்றும் சட்டரீதியான அமைப்பினை அமைத்துத் தந்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, சட்டப்பிரிவு 35-A கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் வாயிலாக இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனின் மேம்பட்ட செயல்திறனுக்கான, ரிசர்வ் வங்கி தன்னிடம் பணி புரியும் உயர் அதிகாரிகளை குறைதீர்ப்பாளராக நியமித்து தீர்ப்பாணய பணியாளர்களையும் நியமித்து அவ்வலுவலகச் செலவையும் ஏற்கிறது.

36. வங்கிக் குறைதீர்ப்பாணையத் திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது ?
முதலில் இத்திட்டம் 1995ல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்ன்ர் 2002ல் திருத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், 36,000 புகார்களை வங்கிகள் குறைதீர்ப்பாயம் கையாண்டுள்ளது. (இவற்றில் எத்தனை புகார் கொடுத்த வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்?)

நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

வலைவிரிக்கும் வங்கிகள்...இரையாகும் மக்கள்....!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் டர்னராக வேலை செய்கிறார். சுமார் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அவருக்கு மனைவியும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகன் மற்றும் மகளும் உள்ளனர். குறைந்த ஊதியத்தில் பற்றாக்குறை வாழ்க்கை நடத்தினாலும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரது நிறுவனத்தில் அனைத்துப்பணியாளர்களும் முகவரிக்கான சான்று ஒன்றும், புகைப்படம் ஒன்றும் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மனோகரனும் அவற்றை கொண்டு சென்றபோது அதைப்பெற்றுக்கொண்ட ICICI வங்கி அதிகாரிகள் விண்ணப்பம் ஒன்றை நிரப்பி கையெழுத்து பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டு ஒன்றையும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் மற்றும் நோட்டிஸ்களை கொடுத்தனர்.

மேலும் அடுத்த மாதத்தில் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ள அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எந்த நேரமும் ஏடிஎம்-மில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

முதல் மாதம் ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது மனோகரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தான் நகரவாசியாக முழு தகுதி பெற்றதாகவும்கூட தோன்றியது. அப்போது கழுத்தில் டை கட்டிய ஒரு இளைஞர் அவரிடம் வந்து, “சார்! கிரெடிட் கார்டு எதுவும் பயன்படுத்தறீங்களா?” என்று கேட்டபோது அவருக்கு எதுவும் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்த இளைஞனே கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை தெரிவித்ததுடன், கிரெடிட் கார்டுக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்றும் கூறினான்.

ஏடிஎம் கார்டை பெற்று புளகாங்கிதம் அடைந்திருந்த மனோகரன் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்திலும் கையெழுத்துப் போட்டார்.

கிரெடிட் கார்டு வந்து சேர்ந்தது. அதைக்கொண்டு 15 ஆயிரம் ரூபாய்வரை பயன்படுத்தலாம் என்பதை புரி்ந்து கொண்ட மனோகரன், முதலில் வீட்டிற்கு நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த குக்கர் ஒன்றினை வாங்கினார்.

முதல் மாத பில் மூவாயிரத்து சொச்சத்துக்கு வந்தது. அதிலும் சுமார் 200 ரூபாய்கள் கட்டினால் போதும் என்றும் கூறப்பட்டிருந்தது. அடுத்த மாதம் மேலும் சுமார் 5 ஆயிரம் ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கினார். ஒரு முறை அவசரத்தேவை என்பதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-இலிருந்து 100 ரூபாய் எடுத்தார், அதற்கான ஏடிஎம் கட்டணம் மட்டுமே 200 ரூபாய் என்பதை அறியாமல்.

இடையே சம்பளப்பணமான 6 ஆயிரம் ரூபாய் குடும்ப செலவுக்கே போதாத நிலையில் கிரெடிட் கார்டுக்கான கடன் தவணையை கட்டத்தவறினார். அதற்கான காலக்கடப்பு கட்டணம் சில மாதங்கள் கூடியதில் அவரது கடன் எல்லைத்தொகையை விட அவரது கடன் தொகை அதிகரித்தது. இப்போது அவரது கடன் தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய்.

மாதம்தோறும் காலக்கடப்பு அபராதம், கடன் எல்லையை மீறியதற்கான அபராதம், எலக்ட்ரானிக் கிளியரிங் செக் திரும்பியதற்கான அபராதம், கடன் தொகைக்கான வட்டி போன்றவை சுமார் 2 ஆயிரம் ரூபாய் அவரது கணக்கில் ஏற்றப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக அவரது சம்பளப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. கிரெடிட் கார்டு பாக்கிக்காக அவரது சம்பள பணத்தை ICICI வங்கி முடக்கி வைத்துள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவழித்த மனோகரன் இதுவரை பலவழிகளில் 25 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் அவரது கணக்கில் இன்னும் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று வங்கி பில் அனுப்புகிறது. மேலும் மாத சம்பளத்தையும் ஸ்வாஹா செய்கிறது. இதற்கு என்ன தீர்வு? யாரிடம் போனால் தீர்வு கிடைக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

மாதசம்பளத்தை பணமாக கொடுக்கச் சொன்னால் நிர்வாகத் தரப்பில் முடியாது என்று கூறுகின்றனர். கடந்த மூன்று மாதமாக வாழ்க்கை நரகமாகி விட்டது. சம்பளத்தையும் இழந்து விடுவதால் பட்டினி என்பது சகஜமாகி வருகிறது.

இந்த வேலை தவிர வேறு தெரியாத மனோகரனுக்கான தொழில் வாய்ப்புகளும் மிகவும் குறைவே. எனவே இந்த வேலையை செய்தாலும் சம்பளம் கிடைக்காது . செய்யாவிட்டாலும் வேறு வழியில்லை.

மனோகரனுக்கு வழிகாட்ட நீங்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா?
(பின்குறிப்பு: இது கற்பனை கதை இல்லை)

கொடுக்கப்படாத கிரெடிட் கார்டுக்கு வழக்கு தொடுக்கும் ICICI வங்கி.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு. சுகுமார் ஒரு M.TECH பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கும் ICICI வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்நிலையில் இவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ICICI வங்கியில் இருந்து கிரெடிட் கார்டுக்கான பாக்கித்தொகை ரூபாய் 36 ஆயிரத்தை கட்டச்சொல்லி ஒரு பில் வந்துள்ளது.


முகவரிப்பகுதியில் பெயர் சுகுமார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இனிஷியலிலும், பெயரின் ஸ்பெல்லிங்கிலும் சில மாறுபாடுகள் இருந்தன. எனவே வேறு யாருக்கோ போகவேண்டிய பில் தனக்கு வந்திருக்கலாம் என்று எண்ணிய திரு. சுகுமார், இது குறித்து அந்த வங்கியின் அண்ணா சாலை கிளைக்கு நேரில் சென்று புகார் செய்துள்ளார்.


அவரை மடக்கி, மடக்கி கேள்வி கேட்ட வங்கி அதிகாரிகள், அவருக்கு எந்த தகவலையும் கூறாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்குள் அவர் பாக்கித்தொகை செலுத்தாதற்காக அவர் மீது தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தி்ல் புகார் செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நாளில் அவர் அங்கு ஆஜராக வேண்டும் என்றும் மற்றொரு கடிதம் வந்தது.


இதைக்கண்ட திரு. சுகுமார், தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யவில்லை எனறும், தமக்கு ICICI வங்கி கிரெடிட் கார்டு எதையும் வழங்கவில்லை என்றும், எனவே வழங்காத கிரெடிட் கார்டுக்கு வசூல் செய்ய முற்படும் ICICI வங்கியிடம் இருந்து தமக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி ஒரு விண்ணப்பத்துடன் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்துக்கு சென்றார்.


அன்றைய தினத்தில் ICICI வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி நொந்துபோயிருந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் வழக்கறிஞர் ஒருவரும், சமூகப்பணியாளர் என்ற பெயரில் ஒருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரி ஒருவரும், வங்கியின் வழக்கறிஞர் ஒருவரும் கூட இருந்தனர்.


கிரெடிட் கார்டு வணிகம் செய்யும் வங்கிகள் அனைத்தும் நுகர்வோர் குறைதீர் அமைப்பு ஏற்படு்த்தவேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை புறக்கணிக்கும் வங்கியும், அதைப்பற்றி கண்டுகொள்ளாத நீதித்துறையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருப்பதை உணர முடிந்தது.


திரு. சுகுமாரின் பெயர் அழைக்கப்பட்டபோது, அவர் தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பிக்கவே இல்லை. எனவே தமக்கு பில் அனுப்பியதே தவறு. தற்போது சட்டப்பணிகள் ஆணையம்வரை வரவழைத்ததற்காக தமக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
நஷ்டஈடு குறித்து பேசாத வங்கியின் வழக்கறிஞர், திரு. சுகுமாருக்கு உதவி செய்யத்தயாராக இருப்பதாகவும், அவரை இந்த விவகாரத்தில் இருந்து கழற்றி விடுவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் திரு. சுகுமார், தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கவே அந்த வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.

அமர்வுக்கு தலைமை தாங்கிய ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதியோ, மற்ற உறுப்பினர்களோ திரு. சுகுமாரின் நஷ்டஈடு கோரும் மனுவை பெறுவதற்குக்கூட முன்வரவில்லை. எனவே அந்த மனு சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அலுவலகத்தில் புகாராக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது போன்ற பிரசினைகளில் சிக்கியுள்ள நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டால் பொதுநலன் வழக்கு மூலம் இது போன்ற பிரசினைகளை தடுக்க முயற்சி மேற்கொள்ள முடியும்.

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்.

நிதியாண்டு முடிவடையும் தறுவாயில் கடன் வழங்கிய நிறுவனங்கள் கடன் வசூல் பணியை முடுக்கி விடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...

நினைவில் நிறுத்துங்கள்!

கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)
.
நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.
.
காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)
.
கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே !
.
நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.
.
வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.
.
இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.

உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம் !

உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம்.
.
வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் , குற்றமுறு அத்துமீறல் புரிந்ததாக கூறப்படுவார்.
.
இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது.
.
வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442)
.
ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)

அவதூறாக பேசுதல் !

உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே.ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)
.
இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)

அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல் !

கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே.
.
ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம்.
.
பிரிவு 503: குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.
.
பிரிவு 506: அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.

பெண்களை அவமதித்தல் !

ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக்கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும்.

அரசுப்பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல் !

அரசுப்பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப்பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)

ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல் !

கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையெனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)
.
ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக்கூறப்படுகிறது (பிரிவு 339)
.
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச்செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறைவைத்தல் என்பர். (பிரிவு 340)
.
மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)
.
முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)
.
முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)

தாக்குதல் !

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான்.எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்;அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,
.
(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது
(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)
.
ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).
.
குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).

வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே !

வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.
.
குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...
முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது
இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது
மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல் - ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)
.
எந்தக்குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர்அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.

தற்காப்புரிமை !

கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.
.
உடல் தற்காப்புரிமை : தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)
முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை.
இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)
.
உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும்.
.
அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.
1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,
2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,
3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,
4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,
5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,
6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,
மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம்.
.
இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது.
.
எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.

கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது ?

கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
.
அந்தப்புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல் படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.
.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.
.
காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும்.
.
நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.
.
மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள்.
.
சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.
.
கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.
-ஆசிரியர் குழு

கடன் பெறும் நுகர்வோருக்கு, கடன் ஒப்பந்த நகலை வங்கிகள் அளிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி.

வங்கியில் கடன் பெறும் பலரும் கடன் பெறும் அவசரத்தில் அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள தவறிவிடுவது வழக்கமாகி வருகிறது. பின்னர் கடன் குறித்த விதிமுறைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது வங்கிகளின் அலைக்கழிப்புக்கு ஆளாகவும் நேர்கிறது.
.
வங்கி நுகர்வோர்களின் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் நுகர்வோர் அனைவருக்கும் கடன் ஒப்பந்தத்தை கட்டாயமாக வங்கிகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆகஸ்ட் 22ம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
.
RBI/2007-08/119
DBOD.No.Leg.BC.28/09.07.05/2007-0-8 ஆகஸ்ட் 22, 2007
அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து
வணிக வங்கிகள் / அகில இந்திய
நிதி நிறுவனங்கள் (பிராந்திய
கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான
பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளுக்கு
வழிகாட்டுதல் – கடன் ஒப்பந்த நகல் அளித்தல்

எங்களின் 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை DBOD.leg.No.BC.104/09.07.002/2002-03ஐப் பார்க்கவும். கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளை வகுப்பது பற்றி வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்கள்குக்கும் அதில் சொல்லியிருந்தோம்.

2. அச் சுற்றறிக்கை பத்தி 2(ii)(C)யின் படி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும், கடன் வசதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் / வரையறைகள் ஆகியவைகளை வகுக்கும்போது, கடன் கொடுக்கும் நிறுவனம் கடன் வாங்குபவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுருக்கமாக எழுதப்பட்டு வங்கி / நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும். இக் கடன் ஒப்பந்தத்தின் நகலையும், அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும் கடன் வாங்குபவருக்கு வங்கி நிறுவனம் அளிக்க வேண்டும் எனவும் அச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

3. சில வங்கிகள், கடன் வாங்குபவர்கள் கேட்டால்தான் கடன் நகலைக் கொடுப்பதாக அறிகிறோம். கடன் ஒப்பந்த நகல், அதில் சொல்லபபட்ட இணைப்புகளின் நகல்கள் ஆகியவைகளைக் கொடுப்பாமல் இருப்பது ஒரு நியாயமற்ற பழக்க வழக்கமாகவே கருதப்படும். மேலும், வங்கிக்கும் கடன் வாங்கியவருக்கும் இடையே சச்சரவு / தகராறுகளை எழுப்பவும் இது வழி கோலும்.

4. எனவே கடன் ஒப்பந்த நகலையும் அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும், கடன் வாங்குபவர் அனைவருக்கும், கடன் அளிக்கப்படும் போதே, வங்கி / நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்.

அன்புடன்

பிரசாந்த் சரன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)
.
கடன் ஒப்பந்த நகலைப் பெறும் வாடிக்கையாளர்கள் அதனை முழுமையாக படித்து புரி்ந்து கொண்டால் பல பிரசினைகளை தவிர்க்க முடியும்.
.
ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தின் சில பகுதிகள் தமிழிலும் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை படிப்பது வங்கி நுகர்வோர்கள் பலருக்கும் பயன் அளிக்கலாம்.
-ஆசிரியர் குழு