கடன் பெறும் நுகர்வோருக்கு, கடன் ஒப்பந்த நகலை வங்கிகள் அளிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி.

வங்கியில் கடன் பெறும் பலரும் கடன் பெறும் அவசரத்தில் அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள தவறிவிடுவது வழக்கமாகி வருகிறது. பின்னர் கடன் குறித்த விதிமுறைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது வங்கிகளின் அலைக்கழிப்புக்கு ஆளாகவும் நேர்கிறது.
.
வங்கி நுகர்வோர்களின் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கடன் பெறும் நுகர்வோர் அனைவருக்கும் கடன் ஒப்பந்தத்தை கட்டாயமாக வங்கிகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆகஸ்ட் 22ம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
.
RBI/2007-08/119
DBOD.No.Leg.BC.28/09.07.05/2007-0-8 ஆகஸ்ட் 22, 2007
அட்டவணைப்படுத்தப்பட்ட அனைத்து
வணிக வங்கிகள் / அகில இந்திய
நிதி நிறுவனங்கள் (பிராந்திய
கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான
பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளுக்கு
வழிகாட்டுதல் – கடன் ஒப்பந்த நகல் அளித்தல்

எங்களின் 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை DBOD.leg.No.BC.104/09.07.002/2002-03ஐப் பார்க்கவும். கடன் கொடுப்பவர்களுக்கான நியாயமான பழக்கவழக்கங்களுக்கான நெறிமுறைகளை வகுப்பது பற்றி வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்கள்குக்கும் அதில் சொல்லியிருந்தோம்.

2. அச் சுற்றறிக்கை பத்தி 2(ii)(C)யின் படி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும், கடன் வசதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் / வரையறைகள் ஆகியவைகளை வகுக்கும்போது, கடன் கொடுக்கும் நிறுவனம் கடன் வாங்குபவரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுருக்கமாக எழுதப்பட்டு வங்கி / நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும். இக் கடன் ஒப்பந்தத்தின் நகலையும், அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும் கடன் வாங்குபவருக்கு வங்கி நிறுவனம் அளிக்க வேண்டும் எனவும் அச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

3. சில வங்கிகள், கடன் வாங்குபவர்கள் கேட்டால்தான் கடன் நகலைக் கொடுப்பதாக அறிகிறோம். கடன் ஒப்பந்த நகல், அதில் சொல்லபபட்ட இணைப்புகளின் நகல்கள் ஆகியவைகளைக் கொடுப்பாமல் இருப்பது ஒரு நியாயமற்ற பழக்க வழக்கமாகவே கருதப்படும். மேலும், வங்கிக்கும் கடன் வாங்கியவருக்கும் இடையே சச்சரவு / தகராறுகளை எழுப்பவும் இது வழி கோலும்.

4. எனவே கடன் ஒப்பந்த நகலையும் அதில் சொல்லப்பட்ட இணைப்புகளின் நகல்களையும், கடன் வாங்குபவர் அனைவருக்கும், கடன் அளிக்கப்படும் போதே, வங்கி / நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்.

அன்புடன்

பிரசாந்த் சரன்
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)
.
கடன் ஒப்பந்த நகலைப் பெறும் வாடிக்கையாளர்கள் அதனை முழுமையாக படித்து புரி்ந்து கொண்டால் பல பிரசினைகளை தவிர்க்க முடியும்.
.
ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தின் சில பகுதிகள் தமிழிலும் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை படிப்பது வங்கி நுகர்வோர்கள் பலருக்கும் பயன் அளிக்கலாம்.
-ஆசிரியர் குழு

சிறப்பு பொருளாதார மண்டலம் – ஓர் சிறப்பு பார்வை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தேட, அதைப்பற்றி ஆழமாக புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதற்கு ஒரு நாட்டின் வளர்ச்சியை எப்படி எடை போட நினைக்கிறோம்? என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பொருள் உற்பத்தி அதிகமாவது மட்டும் ஒரு நாட்டிற்கு போதுமா? அது சமமாக அல்லது சமூக நீதி அடிப்படையில் பங்கிடப்படுவது அதைவிட முக்கியல்லவா?

உதாரணமாக, மின்சாரம் தயாரிக்க அணு சக்தி அவசியமானது என்று கூறும்போது, அணுசக்தியால் கிடைக்கும் மின்சாரம் யாருக்கு அதிகம் கிடைக்கிறது? யாருக்கு கிடைக்கவில்லை? என்பதையும் இணைத்தே சிந்திப்பது நல்லதல்லவா?! சாதாரண, ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு திட்டம் அமையுமானால் (அந்த மின்சாரம் சேர்ந்தடைந்தால்) அதை வரவேற்பது நல்லது தான்.

சுகாதாரத்தில் சமீபத்திய இந்திய புள்ளிவிபரங்களை பாருங்கள்:
.
*பேறுகாலத்தில் இரத்த சோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் (88 சதவீதம் ) இருக்கும் நாடு.
.
*5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் 80% இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.46% பேர் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (எத்தியோப்பியா, சோமாலியாவில்கூட இது 36 சதவீதம்தான்)

*பெரியவர்களிடம் சத்துக்குறைவு 40 சதவீதம் உள்ளது. 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 50% சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாக பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்தான் அதிகம் (88%), இஸ்லாமியர்கள் (85%), OBC- 80%.

இதைச்சொல்லும் பத்திரிகைகள், அது அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம்தான் அதிகம் இருப்பதை சொல்லாமல் விடுவது எதனால்? அவர்கள் அப்படியே இருக்கட்டும், மீதமுள்ள மக்கள் பயனடைந்தால் சரிதான் என்னும் போக்கை சரியான திசையிலான வளர்ச்சிதான் என்று ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதுதான் முக்கியம்.

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் (குறிப்பாக பெண்கள், சிறு குழந்தைகள் அதிலும் அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்) வறுமையால் வாடுகையில் (சத்துக்குறைவு எனும் வார்த்தை வறுமையை மறைக்க எவ்வாறெல்லாம் உதவுகிறது) நாடு சரியான வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா? இல்லையா? என்பதைவிட அவை யாருக்கு அதிக நன்மை பயக்கிறது என்பது முக்கியம். அவை சாதாரண ஏழை மக்களுக்கு (குறிப்பாக அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு) அதிக பயனை கொடுத்து அவர்களை தற்சார்பு நிலைக்கு கொண்டு சென்றால் அதை ஆதரிப்பது தவறில்லை.

மேலும் விளைநிலங்கள் கைப்பற்றப்படுவது சரியா? தவறா? என்பதைவிட, நில உச்சவரம்பு சட்டம் மூலம் உபரியாக உள்ள விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டு சாதாரண மக்கள் பயனுறும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவதும் தவறில்லை.

இந்திய, தமிழக சூழலில் வறுமையால் (சத்துக்குறைவால்) வாடும் மக்களுக்கு அவை அதிக பயனளிக்குமாறு மாற்றுத்திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த முடியும். மேலும் வணிக நலன்களை அதிகம் கட்டிகாக்கும் சுய உதவி குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்தி பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை வளர்த்தெடுக்கலாம்.

தேவையை ஒட்டி, ஒவ்வொரு தெரு, சுயஉதவிக்குழுக்கள், வார்டு, சிறு கிராமம், பெரிய கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் இவைகளுக்கு அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கு ஏற்ப சிறு, பெரு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அங்கு சத்துக்குறைவால் பாதிக்கப்படும் மக்களை பட்டியலிட்டு அது அனைவரது பார்வைக்கும் படும்படி பொது இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

எங்கெல்லாம் விளைநிலங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் சமூக வேளாண்மைக்கூடங்கள் (Community Agricultural Farms for Exploited – CAFÉ) உருவாக்கப்படவேண்டும். சத்துக்குறைவை போக்க பணபயிர்களுக்கு பதிலாக ஊட்டசத்து நிறைந்த உணவுப்பொருட்களை (தானியங்கள், பயிறு வகைகள், காய்-கனிகள்) உற்பத்தி செய்ய வேண்டும். சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் வேலை, உரிய கூலிக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். முடிந்தவரை இயற்கை வேளாண் முறையையே பின்பற்ற வேண்டும்.

விளைந்த பொருட்கள் முதலில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். (தேவையெனில் அதற்கென சட்டம் கொண்டு வரலாம்). உபரியாக இருக்கும் பொருட்களின் மீதியை மட்டும் சந்தைக்கு கொண்டு சென்று, அதனால் கிடைக்கும் பணத்தை அரசுக்கு ஒரு பகுதியும், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் சமூக சொத்தாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றம்/ முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு படும்படி வைக்கப்படவேண்டும்.

விளைநிலங்கள் அல்லாத பிற நிலங்களிலும், அந்தந்த இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னென்ன தொழில் தொடங்கலாம் என்பதை அப்பகுதி மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அந்த தொழிற்கூடங்களிலும்கூட வேலை முன்னுரிமை அடிப்படையில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவேண்டும். நிரந்தர வேலை/ உரியகூலி... போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ஏழை மக்களுக்கான சமூக பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும். இவற்றை நடைமுறைபடுத்த உள்ளூர் சமூக அமைப்புகள் / அரசு அதிகாரிகள் கொண்ட குழு உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சத்துக்குறைவு என்பது தேசிய/மாநில அளவில் சட்டரீதியான குற்றமாக கருதப்பட்டு ஒவ்வொரு நபர்/குடும்ப அளவில் அதற்கான விரிவான காரணங்கள், மற்றும் அதை போக்கவல்ல நடைமுறை செயல்பாடுகள் எழுத்து வடிவில் எழுதப்பட்டு, அவர்கள் சத்துக்குறைவில் இருந்து மீளும்வரை தொடர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டபின் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து (சிக்கல்/சிரமங்கள், லாபம்/நட்டங்கள்...) அவற்றை மேலும் செழுமைப்படுத்த தேவையான திட்டங்கள்/ உத்திகள்/ நடைமுறை செயல்பாடுகள்/ சுயசார்பு, உள்ளூர் மக்களின் தேவைகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வறுமைக்கான (சத்துக்குறைவிற்கான) சரியான காரணங்கள் முறையாக விளக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஏற்படும் சிரமங்களை எடுத்துரைக்க உரிய இடைவேளையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இலவசமாக சத்துணவு வழங்குவது சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டு, மேற்படி செயல்பாடுகளை செய்யாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கொள்ளை இலாபம் ஒன்றையே குறியாக வைத்து செயல்படும் பெரு நிறுவனங்கள் / தொழிற்கூடங்களுக்கு பதிலாக, சமூக அக்கறையுடன் செயல்படும் வணிக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

சுருக்கமாக தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர்/ மனித நலன்/ உரிமைகள் மீறும், சுற்றுச்சூழல் சுத்தத்தை உதாசீனப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பதில் சாதாரண ஏழை மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை போக்கி, அவர்களுக்கு சத்தான உணவு, சுத்தமான நீர், அடிப்படை வசதிகள் (வீடு, உடை) உறுதி செய்யப்படுதல், சுற்றுச்சூழலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மாசுபடாமல் காத்தல், வேலைக்கு உத்தரவாதம், மன அமைதி, சுரண்டலற்ற மனித உறவுகள், இவற்றை ஏற்படுத்தி, நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவை என சந்தேகமின்றி தெளிவாக கூறலாம்.





-மரு. வீ. புகழேந்தி, MBBS,
சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு,
கல்பாக்கம்