வலைவிரிக்கும் வங்கிகள்...இரையாகும் மக்கள்....!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் டர்னராக வேலை செய்கிறார். சுமார் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அவருக்கு மனைவியும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகன் மற்றும் மகளும் உள்ளனர். குறைந்த ஊதியத்தில் பற்றாக்குறை வாழ்க்கை நடத்தினாலும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரது நிறுவனத்தில் அனைத்துப்பணியாளர்களும் முகவரிக்கான சான்று ஒன்றும், புகைப்படம் ஒன்றும் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மனோகரனும் அவற்றை கொண்டு சென்றபோது அதைப்பெற்றுக்கொண்ட ICICI வங்கி அதிகாரிகள் விண்ணப்பம் ஒன்றை நிரப்பி கையெழுத்து பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டு ஒன்றையும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் மற்றும் நோட்டிஸ்களை கொடுத்தனர்.

மேலும் அடுத்த மாதத்தில் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ள அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எந்த நேரமும் ஏடிஎம்-மில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

முதல் மாதம் ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது மனோகரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தான் நகரவாசியாக முழு தகுதி பெற்றதாகவும்கூட தோன்றியது. அப்போது கழுத்தில் டை கட்டிய ஒரு இளைஞர் அவரிடம் வந்து, “சார்! கிரெடிட் கார்டு எதுவும் பயன்படுத்தறீங்களா?” என்று கேட்டபோது அவருக்கு எதுவும் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் அந்த இளைஞனே கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை தெரிவித்ததுடன், கிரெடிட் கார்டுக்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்றும் கூறினான்.

ஏடிஎம் கார்டை பெற்று புளகாங்கிதம் அடைந்திருந்த மனோகரன் கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்திலும் கையெழுத்துப் போட்டார்.

கிரெடிட் கார்டு வந்து சேர்ந்தது. அதைக்கொண்டு 15 ஆயிரம் ரூபாய்வரை பயன்படுத்தலாம் என்பதை புரி்ந்து கொண்ட மனோகரன், முதலில் வீட்டிற்கு நீண்ட நாட்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த குக்கர் ஒன்றினை வாங்கினார்.

முதல் மாத பில் மூவாயிரத்து சொச்சத்துக்கு வந்தது. அதிலும் சுமார் 200 ரூபாய்கள் கட்டினால் போதும் என்றும் கூறப்பட்டிருந்தது. அடுத்த மாதம் மேலும் சுமார் 5 ஆயிரம் ரூபாய்களுக்கு பொருட்களை வாங்கினார். ஒரு முறை அவசரத்தேவை என்பதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்-இலிருந்து 100 ரூபாய் எடுத்தார், அதற்கான ஏடிஎம் கட்டணம் மட்டுமே 200 ரூபாய் என்பதை அறியாமல்.

இடையே சம்பளப்பணமான 6 ஆயிரம் ரூபாய் குடும்ப செலவுக்கே போதாத நிலையில் கிரெடிட் கார்டுக்கான கடன் தவணையை கட்டத்தவறினார். அதற்கான காலக்கடப்பு கட்டணம் சில மாதங்கள் கூடியதில் அவரது கடன் எல்லைத்தொகையை விட அவரது கடன் தொகை அதிகரித்தது. இப்போது அவரது கடன் தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய்.

மாதம்தோறும் காலக்கடப்பு அபராதம், கடன் எல்லையை மீறியதற்கான அபராதம், எலக்ட்ரானிக் கிளியரிங் செக் திரும்பியதற்கான அபராதம், கடன் தொகைக்கான வட்டி போன்றவை சுமார் 2 ஆயிரம் ரூபாய் அவரது கணக்கில் ஏற்றப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக அவரது சம்பளப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. கிரெடிட் கார்டு பாக்கிக்காக அவரது சம்பள பணத்தை ICICI வங்கி முடக்கி வைத்துள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவழித்த மனோகரன் இதுவரை பலவழிகளில் 25 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் அவரது கணக்கில் இன்னும் 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று வங்கி பில் அனுப்புகிறது. மேலும் மாத சம்பளத்தையும் ஸ்வாஹா செய்கிறது. இதற்கு என்ன தீர்வு? யாரிடம் போனால் தீர்வு கிடைக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

மாதசம்பளத்தை பணமாக கொடுக்கச் சொன்னால் நிர்வாகத் தரப்பில் முடியாது என்று கூறுகின்றனர். கடந்த மூன்று மாதமாக வாழ்க்கை நரகமாகி விட்டது. சம்பளத்தையும் இழந்து விடுவதால் பட்டினி என்பது சகஜமாகி வருகிறது.

இந்த வேலை தவிர வேறு தெரியாத மனோகரனுக்கான தொழில் வாய்ப்புகளும் மிகவும் குறைவே. எனவே இந்த வேலையை செய்தாலும் சம்பளம் கிடைக்காது . செய்யாவிட்டாலும் வேறு வழியில்லை.

மனோகரனுக்கு வழிகாட்ட நீங்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா?
(பின்குறிப்பு: இது கற்பனை கதை இல்லை)

4 மறுமொழிகள்:

Anonymous said...

ஐயோ

Anonymous said...

இது போன்ர பிரசினைகளுக்கு தீர்வே இல்லையா?

Anonymous said...

ஏழை எளிய மக்களை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கடன் வலைக்குள் சிக்க வைக்கும் செயலை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.

Santhosh said...

அவர் இதில் இருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது அந்த ECSஜ முடுக்குவது. அவர் இவ்வாறு செய்த பின்னரும். அந்த வங்கி அவருடைய சம்பள பணத்தை தர மறுத்தால் வழக்கு தொடரவேண்டியதை தவிர வேறு வழியில்லை. ஏறகனவே இது போன்ற ஒரு நிகழ்வு நடந்து, வங்கிகள் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவரது கணக்கில் பணம் எடுக்கக்கூடாது என்று தீர்ப்பு வந்துள்ளது. எனவே அவர் ECSஜ முடிக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும். இல்லாவிட்டால் அவர் தன்னுடைய சம்பள கணக்கை வேறு வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால் கடன் அட்டைபற்றி தெரியாது என்று சொல்லுவது நீதிமன்றத்தில் எடுபடாது.