கொடுக்கப்படாத கிரெடிட் கார்டுக்கு வழக்கு தொடுக்கும் ICICI வங்கி.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திரு. சுகுமார் ஒரு M.TECH பட்டதாரி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கும் ICICI வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்நிலையில் இவருக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ICICI வங்கியில் இருந்து கிரெடிட் கார்டுக்கான பாக்கித்தொகை ரூபாய் 36 ஆயிரத்தை கட்டச்சொல்லி ஒரு பில் வந்துள்ளது.


முகவரிப்பகுதியில் பெயர் சுகுமார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இனிஷியலிலும், பெயரின் ஸ்பெல்லிங்கிலும் சில மாறுபாடுகள் இருந்தன. எனவே வேறு யாருக்கோ போகவேண்டிய பில் தனக்கு வந்திருக்கலாம் என்று எண்ணிய திரு. சுகுமார், இது குறித்து அந்த வங்கியின் அண்ணா சாலை கிளைக்கு நேரில் சென்று புகார் செய்துள்ளார்.


அவரை மடக்கி, மடக்கி கேள்வி கேட்ட வங்கி அதிகாரிகள், அவருக்கு எந்த தகவலையும் கூறாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்குள் அவர் பாக்கித்தொகை செலுத்தாதற்காக அவர் மீது தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தி்ல் புகார் செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நாளில் அவர் அங்கு ஆஜராக வேண்டும் என்றும் மற்றொரு கடிதம் வந்தது.


இதைக்கண்ட திரு. சுகுமார், தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யவில்லை எனறும், தமக்கு ICICI வங்கி கிரெடிட் கார்டு எதையும் வழங்கவில்லை என்றும், எனவே வழங்காத கிரெடிட் கார்டுக்கு வசூல் செய்ய முற்படும் ICICI வங்கியிடம் இருந்து தமக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி ஒரு விண்ணப்பத்துடன் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையத்துக்கு சென்றார்.


அன்றைய தினத்தில் ICICI வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி நொந்துபோயிருந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் வழக்கறிஞர் ஒருவரும், சமூகப்பணியாளர் என்ற பெயரில் ஒருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரி ஒருவரும், வங்கியின் வழக்கறிஞர் ஒருவரும் கூட இருந்தனர்.


கிரெடிட் கார்டு வணிகம் செய்யும் வங்கிகள் அனைத்தும் நுகர்வோர் குறைதீர் அமைப்பு ஏற்படு்த்தவேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை புறக்கணிக்கும் வங்கியும், அதைப்பற்றி கண்டுகொள்ளாத நீதித்துறையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருப்பதை உணர முடிந்தது.


திரு. சுகுமாரின் பெயர் அழைக்கப்பட்டபோது, அவர் தாம் கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பிக்கவே இல்லை. எனவே தமக்கு பில் அனுப்பியதே தவறு. தற்போது சட்டப்பணிகள் ஆணையம்வரை வரவழைத்ததற்காக தமக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
நஷ்டஈடு குறித்து பேசாத வங்கியின் வழக்கறிஞர், திரு. சுகுமாருக்கு உதவி செய்யத்தயாராக இருப்பதாகவும், அவரை இந்த விவகாரத்தில் இருந்து கழற்றி விடுவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் திரு. சுகுமார், தமக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கவே அந்த வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.

அமர்வுக்கு தலைமை தாங்கிய ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதியோ, மற்ற உறுப்பினர்களோ திரு. சுகுமாரின் நஷ்டஈடு கோரும் மனுவை பெறுவதற்குக்கூட முன்வரவில்லை. எனவே அந்த மனு சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அலுவலகத்தில் புகாராக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது போன்ற பிரசினைகளில் சிக்கியுள்ள நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டால் பொதுநலன் வழக்கு மூலம் இது போன்ற பிரசினைகளை தடுக்க முயற்சி மேற்கொள்ள முடியும்.

4 மறுமொழிகள்:

வவ்வால் said...

ஆமாம் இது போல அடிக்கடி ஐசிஐசிஐ வங்கி செய்கிறது, நான் கூட கிரெடிட் கார்ட் வாங்கவே இல்லை ஆனால் கடந்த மாதம் செல்ப்பேசியில் அழைத்து கடன் அட்டை நிலுவை கட்டணும் என்றார்கள், நான் கார்டே வாங்கலையே எந்த பேரு அட்ரெஸ்னு போனிலே கேட்டேன், அதற்கு சரியான விவரம் சொல்லாமல் மழுப்பினார்கள் , அவர்கள் விசாரிப்பது மட்டும் தான் வேலை மற்றப்படி எதுவும் தெரியாது , உங்களுக்கு பில் வரலைனா விட்றுங்க என்று சொல்லி வைத்துவிட்டார்கள்.

அதன் பின்னர் எதுவும் கேட்கலை.நானும் மீண்டும் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

Anonymous said...

ஹைகோர்ட்டில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் லோக் அதாலத் என்ற பெயரில் நடக்கும் கட்டைபஞ்சாயத்துகள் குறித்தும் எழுதலாமே.

அகராதி said...

படிக்கவே பயங்கரமாக உள்ளது. இதுபோன்ற அராஜகக்காரர்களின் பிடியிலிருந்து தப்புவதற்கு வழியே இல்லையா?

அகராதி said...

படிக்கவே பயங்கரமாக உள்ளது. இதுபோன்ற அராஜகக்காரர்களின் பிடியிலிருந்து தப்புவதற்கு வழியே இல்லையா?