கிரெடிட் கார்டின் வரலாறு

உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் வணிகச்சூழல் பல அதிரடி மாற்றங்களை சந்தித்துக் கொண்டுள்ளது. அதில் முதன்மையானது வங்கிச்சேவை.

முன்பொரு காலத்தில் வங்கியில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ மிக அதிக காலம் பிடிக்கும். அதுவும் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அதனஅ வேலைநேரங்களில் மட்டும்தான் வரவு, செலவு செய்யமுடியும். ஆனால் தற்போது வங்கியின் எந்தக் கிளையிலும், எந்த நேரத்திலும் பணம் செலுத்தவோ, எடுக்கவோ முடியும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்து பார்த்திராத மாற்றமாகும்.

அதேபோல வங்கிக்கடன் என்பதே நிலம் அல்லது வீடு போன்ற சொத்துகளை அடமானம் வைத்து வாங்கும் ஒரு அம்சமாக இருந்தது. இந்த அனைத்து நடைமுறைகளையும் மாற்றியமைத்த பெருமைக்குரியது கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளே.

பணப்பரிமாற்றக் கருவியாகவும், கடன் வழங்கும் கருவியாகவும் செயல்படும் இந்த கிரெடிட் கார்டின் தோற்ற வரலாறு மிகவும் சுவையானது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த புனை கதை எழுத்தாளரான எட்வர்ட் பெல்லாமி என்பவர், 1887ம் ஆண்டு வெளியிட்ட “பின்னோக்கி பார்த்தல்” (Looking Backward) 2000 – 1887 என்ற அறிவியல் புனைகதையில், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 2000ஆவது ஆண்டில் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருக்கும் எனக் கணித்திருக்கிறார்.

ஆனால் நடைமுறையில் கிரெடிட் கார்டுகள் வெகு விரைவிலேயே புழக்கத்திற்கு வந்து விட்டன. 1920ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் வாகன எரிபொருள் (பெட்ரோலிய) நிறுவனங்கள், வாடிக்கையாளர்களான வாகன உரிமையாளர்களுக்கு கடனில் (நமது மொழியில் கூறவேண்டுமானால் “அக்கவுண்டி”ல்) எரிபொருள் நிரப்ப ஆரம்பித்தன. இதற்கு அடையாள அட்டை வழங்கி அதில் கடன் தொகையை குறிக்கும் பழக்கம் தொடங்கிய பின், ஒரு பெட்ரோலிய நிறுவனம் வழங்கிய கடன் அடையாள அட்டையை மற்ற நிறுவனங்களும் அங்கீகரித்து, வாகன உரிமையாளர்களுக்கு கடன் வழங்க முன் வந்தன. இந்த முறை பெரிய பிரசினைகள் ஏதுமின்றி வணிகத்தை அதிகரிக்க உதவி செய்தது.

இந்த புதிய அம்சம் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை நடத்துவோரை கவர்ந்தது. இதையடு்த்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்க் எக்ஸ் மெக்நமரா என்பவர், 1950ம் ஆண்டில் உணவகங்களிலும், தங்கும் விடுதிகளிலும் ஏற்கப்படும் டைனர்ஸ் கிளப் கார்டு (Diners Club Card) என்ற முதலாவது கிரெடிட் கார்டை உருவாக்கினார். இந்த கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிலேயே சுமார் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை உருவாக்கியது. அந்த வாடிக்கையாளர்கள் சுமார் 1000 உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் இந்த கார்டுகளை பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டது.

பயணத்தை அதிகம் மேற்கொள்ளும் வணிகர்களிடம், டைனர்ஸ் கிளப் கார்ட் அடைந்த வெற்றி காரணமாக பயணத்தேவைகள், அஞ்சல், பணப்பரிமாற்றம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவந்த “அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” “வெஸ்டர்ன் யூனியன்” போன்ற நிறுவனங்களும் பயணிகளுக்கான கிரெடிட் கார்டுகளை வழங்கத் தொடங்கின.

இந்த கார்டுகள் அடைந்த வெற்றி வங்கித்தொழில் அதிபர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து பாங்க் ஆஃப் அமெரிக்கா, பாங்க் அமெரிக்கார்ட் (Bank Americard) என்ற புதிய முழுமையான கிரெடிட் கார்டை 1958ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த கார்டு உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் மட்டும் அல்லாமல் அனைத்து வணிக மையங்களிலும் ஏற்கப்பட்டது.

இதற்கு போட்டியாக மற்றொரு அமெரிக்க வங்கியான இண்டர்பேங்க் 1966ம் ஆண்டில், மாஸ்டர்சார்ஜ் என்ற கார்டை அறிமுகப்படுத்தியது.

பாங்க் அமெரிக்கார்ட் 1976ம் ஆண்டில் “விசா” (VISA) என்றும், மாஸ்டர்சார்ஜ் “மாஸ்டர் கார்ட்” (MASTER CARD) என்றும் பெயர் மாற்றம் பெற்று அசுரவேகத்தில் வளர்ச்சி அடையத் தொடங்கின. இந்த நிலையில் இத்தகைய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்திய பெட்ரோலிய நிறுவனங்கள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுடன் இணைந்து கோ பிராண்டட் கார்டுகளை அறிமுகப்படுத்தின. இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் கணக்குகளை பராமரிக்க வேண்டிய வேலைகளை தவிர்த்துக்கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

சாதாரண வங்கிப்பணிகளை மேற்கொண்ட சிட்டிபாங்க் கிரெடிட் கார்டு வணிகத்தில் குதிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது டைனர்ஸ் கிளப் கார்டும் விசா மற்றும் மாஸ்டர் கார்டின் வருகையால் சற்றே சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையை சிட்டிபாங்க் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது. டைனர்ஸ் கிளப்பை கைப்பற்றிய சிட்டிபாங்க் டைனர்ஸ் கிளப் வாடிக்கையாளர்களை, சிட்டிபாங்க் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொண்டது.

இதைப்பார்த்த விசாவும், மாஸ்டர்கார்டும் சிட்டிபாங்க்குக்கு தேவையான மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை வழங்க முன்வந்தது. இவ்வாறாக டைனர்ஸ் கிளப்பின் வாடிக்கையாளர்கள் சிட்டி பாங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தத் துவங்கினர். அதற்கான தொழில் நுட்பத்தையும், கடனுக்கான மூலததனத்தையும் விசாவும், மாஸ்டர் கார்டும் வழங்கின. இதையடுத்து இதேபோன்ற ஏற்பாட்டில் பார்கிளேஸ் பாங்க் உட்பட பல்வேறு வங்கிகள் கிரெடிட் கார்டு வணிகத்தில் இறங்கின.

மாஸ்டர் மற்றும் விசா நிறுவனங்கள் நேரடியாக கிரெடிட் கார்டு வணிகத்தில் இறங்காமல் வணிக வங்கிகளுக்கு தொழில் நுட்பமும், மூலதனமும் வழங்கும் முதன்மை வங்கிகளாக உருமாறின.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

3 மறுமொழிகள்:

நுகர்வோர் நலன் said...

கிரெடிட் கார்டு குறித்த சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவற்றிற்கான பதிலை தேடிக் கண்டுபிடித்து தருவதற்கு முயற்சிக்கிறேன்.

-சுந்தரராஜன்.

யாத்ரீகன் said...

very interesting..never had thought about how it would have started.. thanks a lot :-)

Unknown said...

ஐயா, வங்கிகளின் வட்டி விகிதத்தை பற்றி எவ்வாறு தெறிந்துகொள்வது. ?