கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மாலை, லண்டன்வாழ் தமிழரான திரு இளஞ்செழியன் குடும்பத்தினருடன் தி.நகர், ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சென்றார். அங்கு நடந்ததை அவரே விவரிக்கிறார்.
‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.
.
லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸுக்குச் சென்றோம்.
குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.
.
அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.
அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.
பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.
மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.
.
என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.
.
கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
.
என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.
.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.
இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.
இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேர் மாம்பலம் போலீஸாரால் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 கலகம் விளைவித்தல், 341 முறைகேடான தடுப்பு, 294B ஆபாசமாக பேசுதல், திட்டுதல், 336 கவனமின்மை காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், 323 தன்னிச்சையாக காயம் விளைவி்த்தல், 506(2) குற்றமுறு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை, சைதாப்பேட்டை 17வது குறறவியல் நடுவர் நீதிமன்றத்தில் வரும் ஜூன் 9ம் தேதியன்று நடைபெறுகிறது.
7 மறுமொழிகள்:
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு சரவணா ஸ்டோர்ஸ் போன்றவர்கள் செய்யும் அராஜம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொணடே வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திரு.இளஞ்செழியனைப் போல பதில் நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்ற பிரசினைகளுக்கு தீர்வு காண முடியும்.
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.
அதிகாரிகள் ஆதரவு பெற்ற சரவணா ஸ்டோர்ஸ்-க்கு எதிராக திரு இளஞ்செழியனுக்கு நீதி கிடைக்குமா?
இளஞ்செழியனுக்கு கிடைக்கும் நீதி இதைப்போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் தடுக்கும்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு அதிகாரிகள் ஆதரவு மட்டுமல்ல; அரசியல்வாதிகளின் ஆதரவும் உள்ளது.
இந்துத்துவ வெறியர்களான சரவணா ஸ்டோர்ஸ் எறியும் பிச்சைக்காசிற்கு, பகுத்தறிவு பேசும் அரசியல்வாதிகளும் வாலாட்டிக் கிடப்பது கேவலமானது.
//இந்துத்துவ வெறியர்களான சரவணா ஸ்டோர்ஸ் எறியும் பிச்சைக்காசிற்கு, பகுத்தறிவு பேசும் அரசியல்வாதிகளும் வாலாட்டிக் கிடப்பது கேவலமானது.//
யார் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வது என்ற நிலைப்பாட்டில்தான் இன்றைய தமிழக ஆட்சியாளர்களும் இருக்கின்றனர். இல்லாவிட்டால் மோசடிமன்னன் சாய்பாபாவிடம் காசு கேட்பார்களா? சாய்பாபா அறிவித்த திட்டம் என்ன ஆச்சு?
தமிழக அரசுக்கு பிச்சை போடுவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த சாய்பாபா, அவருடைய பக்தர்களிடம் பிடுங்கியது எவ்வளவு?
நுகர்வோர் உரிமைகள் குறித்து தொடராக பதிவு செய்தால் பயன்படுமே.
எத்தனையோ முறை சரவணா வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற அனுபவங்கள் நடந்திருக்கிறது.ஆனாலும் நம் மக்கள் தொடர்ந்து போய் கொண்டுதான் இருப்பார்கள்.யாருக்கோதானே நடந்தது நமக்கென்ன என்ற மனப்பான்மை இருக்கும்வரை இவர்கள் இப்படி நடந்து கொண்டு தான் இருப்பார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ் நம்மால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும்.
முதல் முறை இதுபோன்ற ஒரு வன்முறை நடந்ததிலிருந்து நான் அவர்களை புறக்கணித்து இன்றும் அதை கடைபிடித்து வருகிறேன்.
babu's comments true.. and am in the same line..
Post a Comment