சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல்.

ஈழத்தமிழரும், லண்டனி்ல் உள்ள பிரபல சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடி ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கும் திரு. இளஞ்செழியன் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி மாலை சென்னை, தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டார்.

முழு விவரத்திற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

இந்த துயர சம்பவம் குறித்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது சரவணா ஸ்டோர்ஸ் பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடந்த குற்றத்தை மறைக்காமல் ஒப்புக்கொண்டனர்.

மேலும் குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்ட ஏழு பேரும் பரம ஏழைகள் என்றும், முதல் தடவை குற்றம் செய்திருப்பதாகவும் எனவே குறைந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தலா ரூ.1,500-00 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

.....

மேற்கூறப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் வாடிக்கையாளர் திரு. இளஞ்செழியன் காவல்துறையில் முதலில் புகார் செய்ததால்,சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் செய்த புகார் ஏற்கப்படவில்லை.

மற்ற தருணங்களில் தாக்குதலுக்கு உள்ளான வாடிக்கையாளர் மீது சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் திருட்டுப்புகார் பதிவு செய்யப்பட்டு தாக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையில், தகவல் உரிமைச் சட்டப்படி சேகரித்த புள்ளிவிவரத்தில் 2008ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் 19 திருட்டுப்புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது மாதத்திற்கு இரு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

.........

ஆனால் திரு. இளஞ்செழியன் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் தங்களை முதல் தடவையாக குற்றம் செய்த குற்றவாளிகள் என்று கூறியுள்ளனர். அது உண்மையாக இருக்கலாம். பணியாளர்கள் நிறுவனம் மாறக்கூடியவர்கள்தான்!

ஆனால் உண்மை குற்றவாளிகள் அந்த ஊழியர்கள்தானா என்பது அனைவருக்கும் தெரியும்.

..........

திரு. இளஞ்செழியன், சரவணா ஸ்டோர்ஸ் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

.........

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் சரவணா ஸ்டோர்ஸ்-க்கு பொருட்கள் வாங்க செல்லலாம். பாதுகாப்பாக சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு வாழ்த்துகள்.

..........

விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதேனும் நடந்துவிட்டால் திரு. இளஞ்செழியனின் வழியில் எதிர்த்து போராடுங்கள். அநீதிக்கு எதிராக போராடாமல் இருப்பதும், அநீதிக்கு துணை போவதுதான்.


பின்குறிப்பு: தமிழ்மணம் பரிந்துரை பகுதியில் உங்கள் பரிந்துரையை செய்யுங்கள். நன்றி!

மக்களின் உயிரோடு விளையாடும் ஊடகங்கள்!

நவீன யுகத்தில் மருத்துவச்சேவையின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த உலகில் உள்ள அனைவருமே அறிவர்.

மக்களாட்சி முறையின் நான்காவது தூண் என்று கருதப்படும் மீடியாத்துறை இந்த மருத்துவச்சேவையை எவ்வாறு பார்க்கிறது என்று பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மருந்து நிறுவனங்களின் கட்டு்ப்பாட்டில் உள்ள மருத்துவத்துறையின் மக்கள் விரோதப்போக்கை எந்த மீடியாவும் கண்டு கொள்வதில்லை. காரணம் மருந்து நிறுவனங்களின் இந்த ஆதிக்கம் அரசு அமைப்புகளை மட்டுமல்லாமல் மீடியாத்துறையையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.

மருத்துவத்துறையில் அவ்வப்போது நடைபெறும் சில அவலங்களை பரபரப்பான செய்திகளாக விற்று காசு சம்பாதிக்கும் மீடியா, அந்த அவலங்களுக்கான காரணங்களையோ, தீர்வுகளையோ ஆராய்வதில்லை.

இது மட்டுமல்லாமல் பல அவலங்களுக்கு இந்த மீடியாவே நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறது.

குறிப்பாக தமிழில் பல சிறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மருத்துவ நிகழ்ச்சிகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பது அதை நடத்துபவர்களுக்கும் தெரியும்,ஒலி-ஒளி பரப்புபவர்களுக்கும் தெரியும். ஆனால் அரசு அமைப்புகளுக்கு மட்டும் இந்த சட்டவிரோத நிகழ்ச்சிகள் குறித்து தெரியாது. அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.


தொலைக்காட்சி ஊடகம் மட்டுமே இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூற முடியாது. இயன்றவரை அனைத்து ஊடகங்களும் இத்தகைய மக்கள் விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.


சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


தமிழ் பத்திரிகைகளில் இந்தியா டுடே புத்திசாலி வாசகர்களின் இதழாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழில் தொடர்ந்து பலகாலமாக வெளிவரும் விளம்பரம் ஒன்று, மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு என்ற பெயரில் BASM, MD with RMP படிப்புகளை வழங்குவதாக கூறுகிறது. மேலும் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படும் இந்த படிப்பு இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான தகுதி என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.

நாம் அறிந்தவரை இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின் என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவோ, அது அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்த படிப்பை இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரிக்க வில்லை. எனவே இது சட்டத்திற்கு எதிரான செயலே.


ஆனால் இதுபற்றி எந்த கவலையுமின்றி, விளம்பரம் மூலம் வரும் வருவாய் மட்டுமே குறியாக இந்தியா டுடே செயல்படுவதாக தோன்றுகிறது.


அதேபோல தினமணியிலும்கூட அதன் ஞாயிறு இணைப்பான தினமணிக் கதிரிலும், நாள்பட்ட நோய்களை உத்தரவாதமாக தீர்ப்பதாக சவால்விடும் விளம்பரங்கள் வாரம்தோறும் வெளியாகி வருகின்றன. இதே பக்கங்களில் நோயை தீர்க்க எண் கணிதம், அருள் வாக்கு ஆகியவற்றுக்குமான விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. அஞ்சல் வழி மருத்துவக்கல்விக்கான விளம்பரமும் உண்டு. இவையும் சட்டரீதியாக தவறான செயல்களே. இத்தகைய விளம்பரங்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் முறைப்படியான கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லர்.


இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள் ஒரு சாமானிய மனிதரின் விழிப்புணர்வோடுகூட செயல்படுவதில்லை. நேச்சுரோபதி, ஹோமியோபதி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளை நடத்திவரும் ஒரு நிறுவனம் ஏழு தலைமுறையாக சித்தமருத்துவம் பார்த்து வருவதாக ஒரு விளம்பரத்தை "ஜூனியர் விகடன்" உட்பட பல பத்திரிகைளில் பார்த்திருக்கலாம். அதில் ஏழாவது தலைமுறை வைத்தியராக சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் புகைப்படமும் வெளியாகி இருக்கும். இந்த சிறுவன் யாருக்கு வைத்தியம் பார்க்கிறான்? இவனிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டவர்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் எந்த பத்திரிகை நிறுவனத்துக்கும் எழவில்லை என்பது சோகம் ததும்பும் நகைச்சுவையாகும்.


மக்கள் இதுபோன்ற போலி மருத்துவர்களை நாடிச்செல்வதற்கு முக்கிய காரணம் நவீன மருத்துவம் என்பது மக்களை கொள்ளை அடிக்கும் செயலாக மாறிப்போனதே. அதற்கு சற்றும் குறைவி்ல்லாத விதத்தில் பத்திரிகைகளும் இத்தகைய போலிகளுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.


வாழ்க பத்திரிகை சுதந்திரம்!-பி. சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)