மக்களின் உயிரோடு விளையாடும் ஊடகங்கள்!

நவீன யுகத்தில் மருத்துவச்சேவையின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த உலகில் உள்ள அனைவருமே அறிவர்.

மக்களாட்சி முறையின் நான்காவது தூண் என்று கருதப்படும் மீடியாத்துறை இந்த மருத்துவச்சேவையை எவ்வாறு பார்க்கிறது என்று பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மருந்து நிறுவனங்களின் கட்டு்ப்பாட்டில் உள்ள மருத்துவத்துறையின் மக்கள் விரோதப்போக்கை எந்த மீடியாவும் கண்டு கொள்வதில்லை. காரணம் மருந்து நிறுவனங்களின் இந்த ஆதிக்கம் அரசு அமைப்புகளை மட்டுமல்லாமல் மீடியாத்துறையையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான்.

மருத்துவத்துறையில் அவ்வப்போது நடைபெறும் சில அவலங்களை பரபரப்பான செய்திகளாக விற்று காசு சம்பாதிக்கும் மீடியா, அந்த அவலங்களுக்கான காரணங்களையோ, தீர்வுகளையோ ஆராய்வதில்லை.

இது மட்டுமல்லாமல் பல அவலங்களுக்கு இந்த மீடியாவே நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறது.

குறிப்பாக தமிழில் பல சிறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மருத்துவ நிகழ்ச்சிகளை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்பது அதை நடத்துபவர்களுக்கும் தெரியும்,ஒலி-ஒளி பரப்புபவர்களுக்கும் தெரியும். ஆனால் அரசு அமைப்புகளுக்கு மட்டும் இந்த சட்டவிரோத நிகழ்ச்சிகள் குறித்து தெரியாது. அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.


தொலைக்காட்சி ஊடகம் மட்டுமே இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூற முடியாது. இயன்றவரை அனைத்து ஊடகங்களும் இத்தகைய மக்கள் விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.


சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


தமிழ் பத்திரிகைகளில் இந்தியா டுடே புத்திசாலி வாசகர்களின் இதழாகப் பார்க்கப்படுகிறது. இந்த இதழில் தொடர்ந்து பலகாலமாக வெளிவரும் விளம்பரம் ஒன்று, மாற்று மருத்துவ டாக்டர் படிப்பு என்ற பெயரில் BASM, MD with RMP படிப்புகளை வழங்குவதாக கூறுகிறது. மேலும் தொலைதூரக் கல்வியில் வழங்கப்படும் இந்த படிப்பு இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான தகுதி என்றும் அந்த விளம்பரம் கூறுகிறது.

நாம் அறிந்தவரை இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின் என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவோ, அது அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்த படிப்பை இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரிக்க வில்லை. எனவே இது சட்டத்திற்கு எதிரான செயலே.


ஆனால் இதுபற்றி எந்த கவலையுமின்றி, விளம்பரம் மூலம் வரும் வருவாய் மட்டுமே குறியாக இந்தியா டுடே செயல்படுவதாக தோன்றுகிறது.


அதேபோல தினமணியிலும்கூட அதன் ஞாயிறு இணைப்பான தினமணிக் கதிரிலும், நாள்பட்ட நோய்களை உத்தரவாதமாக தீர்ப்பதாக சவால்விடும் விளம்பரங்கள் வாரம்தோறும் வெளியாகி வருகின்றன. இதே பக்கங்களில் நோயை தீர்க்க எண் கணிதம், அருள் வாக்கு ஆகியவற்றுக்குமான விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. அஞ்சல் வழி மருத்துவக்கல்விக்கான விளம்பரமும் உண்டு. இவையும் சட்டரீதியாக தவறான செயல்களே. இத்தகைய விளம்பரங்களை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் முறைப்படியான கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லர்.


இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகைகள் ஒரு சாமானிய மனிதரின் விழிப்புணர்வோடுகூட செயல்படுவதில்லை. நேச்சுரோபதி, ஹோமியோபதி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளை நடத்திவரும் ஒரு நிறுவனம் ஏழு தலைமுறையாக சித்தமருத்துவம் பார்த்து வருவதாக ஒரு விளம்பரத்தை "ஜூனியர் விகடன்" உட்பட பல பத்திரிகைளில் பார்த்திருக்கலாம். அதில் ஏழாவது தலைமுறை வைத்தியராக சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனின் புகைப்படமும் வெளியாகி இருக்கும். இந்த சிறுவன் யாருக்கு வைத்தியம் பார்க்கிறான்? இவனிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டவர்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் எந்த பத்திரிகை நிறுவனத்துக்கும் எழவில்லை என்பது சோகம் ததும்பும் நகைச்சுவையாகும்.


மக்கள் இதுபோன்ற போலி மருத்துவர்களை நாடிச்செல்வதற்கு முக்கிய காரணம் நவீன மருத்துவம் என்பது மக்களை கொள்ளை அடிக்கும் செயலாக மாறிப்போனதே. அதற்கு சற்றும் குறைவி்ல்லாத விதத்தில் பத்திரிகைகளும் இத்தகைய போலிகளுக்கு விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.


வாழ்க பத்திரிகை சுதந்திரம்!



-பி. சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)


வி.ஜி.பி. தங்கக் கடற்கரையிலிருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.

கடந்த ஆகஸ்ட் 7, வியாழன் அன்று சென்னை, விபச்சார தடுப்பு காவல்துறையினருக்கு சிட்லபாக்கத்தை சேர்ந்த பூங்கா வெங்கடேசன் என்பவர் அண்டை மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நீலாங்கரை பகுதியில் ஒரு மாருதி 800 வாகனத்தை சோதனை செய்ததில் பாலியல் தொழிலாளிகளான இரண்டு பெண்களும், திருப்பதி – சொர்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மணி என்ற குமார் மற்றும் கேரள மாநிலம் முன்னாரைச் சேர்ந்த ஜோஸப் ஆகிய இரண்டு பாலியல் தரகர்களும் சிக்கினர்.

இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அப்பெண்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பெண்கள் விஜிபி தங்கக் கடற்கரை உள்ளே உள்ள விடுதி ஒன்றில் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பாலியல் தரகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பூங்கா வெங்கடேசன் கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் கோலோச்சி வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. ஆந்திராவிற்கு பாதுகாப்பாக தப்பி சென்றுள்ள பூங்கா வெங்கடேசனை காவல்துறையினர் "வலைவீசி" தேடி வருகின்றனர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாம் அறிந்தவரை இந்தச் செய்தி வேறு எந்த செய்தி தாளிலும், இதழிலும் முழுமையாக வெளியாகவில்லை. வெளியான சில இதழ்களிலும் வி.ஜி.பி. நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக ஒரு தனியார் விடுதி என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளிகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற நீதிமன்ற கண்டிப்பு காரணமாக இந்த செய்தியை செய்தித்துறையினர் முழுமையாகவோ, பகுதியாகவோ புறக்கணித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், அந்தப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்தான், பல செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை புறக்கணிக்க காரணமாக இருக்கிறது என்பதே உண்மை. வி.ஜி.பி. நிறுவனம் என்பது உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. "உழைத்தால் உயரலாம்" என்ற மந்திர ஸ்லோகத்தை நடைமுறையில் நிரூபித்த-நிரூபிக்கும் நிறுவனமாக அந்த நிறுவனம் மீடியா உலகத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதை மேலும் காப்பாற்றும் விதமாக - உலக அமைதி ஆலயம், மேலாண்மை பயிற்சி மையம், மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை விஜிபி நிறுவனம் நடத்தி வருகிறது.

இத்தகைய பெருமைக்குரிய ஒரு நிறுவனத்தை பாலியல் தொழிலோடு தொடர்பு படுத்துவதில் நமது மீடியா முதலாளிகளுக்கு உள்ள சிக்கல்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை வெளியிடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலியல் தொழில், மனித குல வரலாற்றில் வேட்டை மற்றும் உழவுக்கு அடுத்து மிகவும் புராதனமான தொழிலாக கருதப்படுகிறது. பல நாடுகளில் பாலியல் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் சில பகுதிகளில் பாலியல் தொழில் சட்டரீதியாகவே அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்தும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மிகப்பரவலாக விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலியல் தொழில் குறித்த விவாதங்களை சற்று தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், தொழிலதிபர்கள் குறித்து சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பங்களே விவாதத்துக்கு உரிய அம்சமாகின்றது.

வி.ஜி.பி நிறுவனத்தினர் கடும் உழைப்புக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பெரும் தொண்டு செய்வதாக கூறப்படுகிறது. தமிழ்க் கவிஞர்களை விமானத்திலும், கப்பலிலும் ஏற்றி ஆழ்கடலின் மேல் மிதந்து கொண்டும், விண்வெளியில் பறந்து கொண்டும் கவியரங்கம் நடத்தி தமிழ் வளர்க்கும் கோமான்களாக இவர்கள் போற்றப்படுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவில் கவிதைகளை எழுதும் திறன் படைத்த கவிச்சக்கரவர்த்திகளாக உருவகப்படுத்தப் படுகின்றனர். மதங்கடந்த ஆன்மிகவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய முகமூடிகள் ஏதோ வி.ஜி.பி. நிறுவனத்துக்கு மட்டுமே அணிவிக்கப்படுவதில்லை. ஏறத்தாழ அனைத்து வணிக உலக பெரும்புள்ளிகளுக்கும் இத்தகைய முகமூடிகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த முகமூடிகள்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகைகள் ஆகியவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களாக திகழ்கின்றனர். எனவே இவர்களை பகைத்துக் கொள்வதை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, பத்திரிகைகளோ விரும்புவதில்லை. எனவே இந்த முகமூடி மனிதர்களின் தவறுகள் அனைத்தும் மூடிமறைக்கப் படுகின்றன. அது இயலாத இடங்களில் திசைதிருப்பப் படுகின்றன. அதன் பிரதிபலனாக முகமூடி மனிதர்களின் இன்பக் கொண்டாட்டங்களில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், செய்தி நிறுவன அதிபர்களுக்கும் பங்கும் கிடைக்கிறது.

இந்த முகமூடி மனிதர்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்தோ, இந்த நிறுவனங்களின் சமூகக் கடமைகள் குறித்தோ, இந்த நிறுவன தயாரிப்பு மற்றும் சேவையை பயன்படுத்தும் நுகர்வோரின் உரிமைகள் குறித்தோ பத்திரிகைகள் வாய்திறப்பதில்லை. அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அவர்களுடைய பங்கை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர்.


மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பாலியல் தொழில் செய்த பெண்கள் எத்தனை நாளாக வி.ஜி.பி. விடுதியி்ல் இருந்தனர்?
2. அவர்களை அங்கே தங்க வைத்தது யார்?
3. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரியவே தெரியாதா?
4. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது வி.ஜி.பி. நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் வைத்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?
5. 15 வருடங்களாக பாலியல் தரகராக கோலோச்சிவரும் பூங்கா வெங்கடேசனின் வெற்றி ரகசியம் என்ன? அவருடைய தொழில் பங்குதாரர்கள் யார்?

கேள்விகளுக்கு முடிவே இல்லை.

மேலும் கேள்வி கேட்க விரும்பும், கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்பும் நண்பர்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்....!

-பி. சுந்தரராஜன்