நுகர்வோர்களுக்கு வணக்கம்!

மனித சமூகத்தில் உள்ள அனைவரும் நாடு, இனம், மதம், மொழி, பாலினம் போன்ற எந்த குழும(GROUP)த்தில் பிரிந்து நின்றாலும் அனைத்து மக்களையும் பிரிக்க முடியாத குழுமம் "நுகர்வோர்" என்ற குழுமமே!
.
பிறந்த குழந்தை முதல், வயோதிகத்தின் விளிம்பில் நிற்கும் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வோராகவே வாழ்கிறோம். பொருளாதாரத்தில் மேன்மை நிலையில் உள்ள செல்வந்தர்கள் முதல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பி்ச்சைக்காரர்கள்வரை அனைவருமே நுகர்வோர்தான். செல்வந்தர் ஒருவர் சொந்தமாக கார் வாங்கும்போது நுகர்வோர் ஆகிறார்; பிச்சைக்காரர் இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்து பேருந்து பயணச்சீட்டு வாங்கும்போது நுகர்வோர் ஆகிறார்.
.
ஆக, அவரவர் தகுதிக்கு ஏற்ப அனைவருமே நுகர்வோர்தான். காட்டில் மறைந்துவாழ்ந்து சர்ச்சைக்குரிய மரணத்தை அடைந்த சந்தன கடத்தல் வீரப்பன் முதல், தலைமறைவு வாழ்க்கை வாழும் நக்ஸல்பாரிகள்வரை அனைவரும் நுகர்வோர்களே.
.
இந்த நுகர்வோர்களை நம்பித்தான் உலகப்பொருளாதாரமே இயங்குகிறது. இந்த நுகர்வோர்கள் கொடுக்கும் வரியிலிருந்துதான் உலகின் அரசுகள் இயங்குகின்றன. பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் மக்கள்கூட காசு கொடுத்துதான் உணவு உண்கின்றனர். கட்டணம் செலுத்தியே பயணம் செய்கின்றனர். இம்மக்கள் உண்ணும் உணவுப்பொருட்களுக்கு வரிகள் செலுத்தப்பட்ட பிறகே அந்த பொருள் உணவாக மாறுகிறது. எனவே இந்த மக்களும், அரசுக்கு (மறைமுகமாக) வரி செலுத்துகின்றனர் என்பதே உண்மை.
இந்த நுகர்வோர்கள் செலுத்தும் விலை /கட்டணத்துக்கு உரிய பொருளை/சேவையை வழங்க வேண்டியது அந்த பொருளை/சேவையை வழங்கும் வணிக/அரசு நிறுவனத்தின் கடமையும், பொறுப்புமாகும். இதனை மேற்பார்வையிட்டு சீர்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
.
நடைமுறையில் நுகர்வோரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? அவ்வாறு நுகர்வோர் நலன்கள் பாதுகாக்கப்படுவதை அரசு கண்காணிக்கிறதா?

0 மறுமொழிகள்: