நுகர்வோர் உரிமைக்கோட்பாட்டின் (சுருக்கமான) வரலாறு

மனித சமூகம் உருவான காலத்தில் வேட்டையாடுதலும், விவசாயமும் தொழிலாக இருந்த காலத்தில் நுகர்வோர் உரிமைக்கான தேவைகள் இருக்கவில்லை. அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் தேவைகளுக்கு, தங்களையே சார்ந்திருந்தனர்.
.
பின் ஏற்பட்ட தொழிற்புரட்சி - உற்பத்தி ஓரிடத்திலும், அதை பயன்படுத்தும் நுகர்வோர் மற்றோர் இடத்திலும் இருக்கும் சமூக சூழ்நிலையை ஏற்படுத்தியது.


இதன் பின்னரே மூலதனக்குவிப்புக்காக தொழிலாளர்களையும், நுகர்வோரையும் ஏமாற்றுவது என்பது வெற்றிகரமான வணிகத்திற்கான கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது.
.
முதலாளித்துவ கொள்கைகளில் முன்னணி வகித்த அமெரிக்காவில்தான் அதற்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்பட்டது. நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சிப்பொறுப்பிற்கு வரும் திட்டம் உள்ளவர்கள் நுகர்வோர் நலன்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் தோன்றியது.
.
இந்நிலையில் 1936ம் ஆண்டில் டாக்டர் கால்ஸ்டன் வார்னன் நுகர்வோர் ஒருங்கமைப்பு (CONSUMERS UNION) என்ற நுகர்வோர் அமைப்பை நிறுவினார்.
.
இதையடுத்து அமெரிக்க குடியரசுத்தலைவரான ஜான் எஃப் கென்னடி 1962ம் ஆண்டு மார்ச் 15ம் நாள் நுகர்வோர் உரிமைகள் சட்டத்தை உருவாக்கினார்.
.
இந்த சட்டத்தின் கீழ் பின்வரும் உரிமைகள் நுகர்வோர் உரிமைகளாக பிரகடனம் செய்யப்பட்டன:
.
1. பாதுகாப்பு உரிமை
2. தகவல் பெறும் உரிமை
3. தேர்ந்தெடுக்கும் உரிமை
4. முறையீட்டு உரிமை
.
இந்த பிரகடனத்தின் அடிப்படையில், 'நுகர்வோர் சர்வதேசியம்' (CONSUMERS INTERNATIONAL) என்ற அமைப்பு நுகர்வோர் உரிமைகளை உலகெங்கும் பரவ முயற்சி செய்தது.
.
இதன் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் அவை, நுகர்வோர் உரிமைகளை அங்கிகரித்து அவற்றை உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டு முறைகளாக வழங்கியது.
.
இதையடுத்து இந்தியாவில் 1986ம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
.
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் விளைவாக உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் கடன் பெற வேண்டுமானால் இதுபோன்ற சில சட்டங்களை உறுப்பு நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் இந்த சட்டம் இந்தியாவில் அமல் படுத்தப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

0 மறுமொழிகள்: